ராகுல்காந்தி எம்பி பதவி பறிப்பு பாஜ அரசை கண்டித்து சத்தியாகிரகப் போராட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

திருவள்ளூர், மார்ச் 27: அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறித்த ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, சத்தியாகிரக போராட்டத்தை எம்பி, எம்எல்ஏ பங்கேற்று நடத்தினர். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்த ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து திருவள்ளூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சத்தியாகிரகப் போராட்டம் நடந்தது. இதில்,  மாவட்ட தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். நகர தலைவரும், நகரமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ஜான் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர் சசிகுமார், அருள்மொழி, தளபதி மூர்த்தி, பூண்டி ராஜா, சரஸ்வதி, வடிவேலு, ரகுராமன், பிரபாகரன், மணவாளன், திவாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த சத்தியாகிரக போராட்டத்தில் எம்எல்ஏக்கள் டாக்டர் கே.ஜெயக்குமார், துரை சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்த ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்தும் கண்டன உரையாற்றினர். மேலும்,  மாநில நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், மோகன்தாஸ், அஸ்வின்குமார், வெங்கடேஷ் ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினர். இதில் வட்டாரத் தலைவர்கள் முகுந்தன், பழனி, ராமன், சதீஷ், மாவட்ட நிர்வாகிகள் சிவா ரெட்டியார், பெரியசாமி, புருஷோத்தமன், திவாகர், வாசுஇளங்கோ, அருள், பொன்ராஜ், செல்வகுமார், ஜோதி சுதாகர், வில்சன், சத்யா, தாஸ், தாஸ்,  கோவிந்தராஜ், கோட்டீஸ்வரன், பாடலீஸ்வரன், பொன்னுரங்கம், மனோகரன், உதயகாந்தி கலீல் ரகுமான் உள்பட பலர் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

ஆவடி: திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அறவழிப் போராட்டம், மாவட்டத் தலைவர் லயன் டி.ரமேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காலை முதலே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள எம்பி ஜெயக்குமார் மற்றும் தொண்டர்கள் அங்கு வருகை தந்தனர். ஆனால் போராட்டம் நடத்த அனுமதி பெறவில்லை எனக்கூறி அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் நடத்த அனுமதி பெற்றனர். இதனைத் தொடர்ந்து திருநின்றவூர் மேம்பாலம் கீழே அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்பு அமர்ந்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பேசிய எம்பி ஜெயக்குமார், பாஜ ஒரு கொடுமையான ஆட்சியை நடத்தி வருகிறது. இந்தியா ஆங்கிலேயர் ஆட்சி காலத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்றார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்டத் தலைவர் லயன் டி.ரமேஷ், எம்பி ஜெயக்குமார், மாநில நிர்வாகிகள் பவன்குமார், அருள்அன்பரசு, அருணாச்சலம், தரணிபாய், விக்டரி மோகன், கிருஷ்ணமூர்த்தி, குமார், பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் திருநின்றவூர் நகரத் தலைவர் விஸ்வநாதன் வரவேற்புரை அளித்தார். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி:காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, போரூரில் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், அறவழி அமைதி போராட்டம் நேற்று நடைபெற்றது. அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர் தலைமையில், 300க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் வேளச்சேரி எம்.எல்.ஏ ஹசன் மௌலானா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,  ‘‘மோடி அரசு ஒரு ஜனநாயக படுகொலை செய்துள்ளது. நாட்டில் பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவார் என்று நினைத்தோம். ஆனால் அவர் மக்களின் நம்பிக்கைக்கு மாறாக பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். தனிப்பட்ட ஒரு சிலரின் சுயநலத்திற்காக  மோடி செயல்படுகிறார்.’’ என்றார். இந்த போராட்டத்தையொட்டி,  பாதுகாப்பிற்காக, போரூர் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Related Stories: