பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை சூப்பர் மார்க்கெட் உரிமையாளர், சூப்பர்வைசர் கைது

திருவொற்றியூர், மார்ச் 25: பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர், சூப்பர்வைசரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் ஜோதி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (51). இவர், மாத்தூர் எம்எம்டிஏ 2வது பிரதான சாலை அருகில், சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இங்கு பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (62), சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். மாத்தூர் பகுதியை சேர்ந்த 3 இளம்பெண்கள் விற்பனையாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.

இந்த இளம்பெண்களிடம், சூப்பர்வைசர் சந்திரசேகர் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து, கடந்த புதன்கிழமை, கடை உரிமையாளரிடம் பெண் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், சூப்பர்வைசரை கண்டிக்காக கடை உரிமையாளர் செந்தில்குமார், 3 பெண் ஊழியர்களையும் தாக்கி வேலையை விட்டு நீக்கி உள்ளார். இதனால், மனமுடைந்த 3 பெண்களும், சவுகார்பேட்டைக்கு சென்று, ஒரு கடையில் பூச்சி மருந்து வாங்கி குடித்துவிட்டு, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 3 பேரையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இதுகுறித்து எண்ணூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் செந்தில்குமார், சூப்பர்வைச்சர் சந்திரசேகர் ஆகிய 2 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: