அயோத்தியாப்பட்டணம் அருகே கூலி தொழிலாளி அடித்து கொலை

அயோத்தியாப்பட்டணம், மார்ச் 25: சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் மாணிக்கம்(47). கூலி தொழிலாளியான இவரது மனைவி ரஜினி(43). அதே பகுதியைச் சேர்ந்த வேலு மகன் பெருமாள்(55). இவருக்கும், ரஜினிக்கும் தகாத உறவு உள்ளதாக மாணிக்கத்திற்கு சந்தேகம் இருந்துள்ளது. இந்நிலையில், பெருமாளிடமிருந்து, மாணிக்கம் ₹60 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதுதொடர்பாக நேற்றிரவு 8.30 மணியளவில், இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

அப்போது, திடீரென மாணிக்கம் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர். பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர் பரிசோதித்து பார்த்ததில், மாணிக்கம் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், காரிப்பட்டி போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று, மாணிக்கம் உடலை கைப்பற்றினர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: