ஜாக்டோ -ஜியோவினர் மனித சங்கிலி போராட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 25: பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஜாக்டோ  ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், மாதப்பன் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் தியோடர் ராபின்சன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக  மாநில அமைப்பு செயலாளர் நாராயணன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் குருநாதன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

போராட்டத்தின் போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் பணிக்காலத்தை பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை படுத்தி ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தேன்கனிக்கோட்டை:  தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு, ஜாக்டோ ஜியோ சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், பாலசுப்பிரமணியன், திம்மப்பா, சூடேஷ், ராஜரத்தினம், அம்புஜம்மா, சக்திவேல், ராஜண்ணா, கதிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சம்சும் ஆலம் நன்றி கூறினார். ஊத்தங்கரை: ஊத்தங்கரை நான்கு முனை அண்ணா சிலை சந்திப்பில், ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், ஞானசேகரன், கணேசன், சரவணன், ராஜசேகரன், பாரதி, கிருஷ்ணமூர்த்தி, சரவணன், ஜெகதாம்பிகை கலந்து கொண்டனர். இளங்கோ நன்றி கூறினார்.

Related Stories: