பள்ளி, கல்லூரி அருகே போதை பொருள் விற்பவர்கள் குறித்து தகவல் அளிக்கலாம் விழிப்புணர்வு கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் பேச்சு

திருச்சி பள்ளி, கல்லூரி அருகே போதை பொருள் விற்பவர்கள் மீது காவல்துறைக்கு தகவல் அளிக்கலாம் என்றுதிருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா கூறினார். திருச்சி ஈவேரா கல்லூரி கலையரங்கத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே ‘போதை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்’ நேற்று நடைபெற்றது.  இதில் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், திருச்சி மாநகரத்தில் போதை பொருள் பயன்பாட்டில் இருந்து இளைஞர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதை பொருட்கள் பயன்படுத்தினால் உடல்நலம், மனநலம், குடும்ப நலம், தொழில் பாதிப்பு மற்றும் சமூகநல பாதிப்பு போன்றவை ஏற்படும். இளம் வயதில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை பயன்படுத்தும் இளைஞர்களின் ஐ.கியூ திறன் குறைந்து நினைவாற்றல் கடுமையாக பாதிக்கப்பட்டு குடும்பம் சீர்கெட்டும். சமூகம் பாழடைந்து விடும்.

எனவே, இதனை சரி செய்து சீர்மிகு தமிழ்நாட்டினை உருவாக்கிட இளைஞர்களாகிய நீங்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகாமலும், அப்படி அடிமையானவர்கள், தெரிந்தவர்களாகவும், நண்பர்களாகவும் இருந்தால் மனநல சிகிச்சை அளித்திட இலவச ஆலோசனை எண்.10581-க்கு அழைத்தும் ஆலோசனை பெற வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகே சமுதாய சீரழிவையும் ஏற்படுத்தும் வகையில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்தால் உடனடியாக காவல்துறைக்கு பிரத்யேக வாட்ஸ் ஆப் 96262-73399 எண்ணிற்கும், காவல்துறை அவசர உதவி எண் 100-க்கும், தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என கூறினார், இதைத்தொடர்ந்து போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா வெளியிட்டு மாணவிகளுக்கு வழங்கினார். கூட்டத்தில் காவல் துணை ஆணையர் (தெற்கு) தேவி, கே.கே.நகர் சரக காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: