சாயல்குடி, மார்ச் 24: வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் வாரிசு வேலை வழங்கக் கோரி தொழிலாளர்கள் 2 நாட்கள் வேலையை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் திரும்ப பெறப்பட்டு நேற்று காலை முதல் வழக்கம்போல் பணிக்கு சென்றனர். வாலிநோக்கத்தில் மாரியூர்-வாலிநோக்கம் ஒன்றிணைந்த கூட்டு நிறுவனமான, தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும், 1,350 ஒப்பந்த பணியாளர்களும், சுமார் 1000க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது உப்பு நிறுவனம் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக புதிய தொழிலாளர்கள் சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் 40 வருடங்கள் வரை பணியாற்றி இறந்து போன, பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் என கூறி, தொழிலாளர்கள் உப்பு நிறுவனத்தில் வேலையை புறக்கணித்து நேற்று முன்தினம் வரை 2 நாள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அரசு உப்பு நிறுவன திட்ட மேலாளர் விஜயன் தொழிற்சங்க நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசி தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் போராட்டம் கைவிடப்பட்டது. தொழிலாளர்கள் அனைவரும் நேற்று காலை முதல் வழக்கமான பணிக்கு சென்று வேலையை செய்தனர்.