ஈரோட்டில் நியோ ஐடி பார்க் தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பாராட்டு

ஈரோடு: ஈரோட்டில் நியோ ஐடி பார்க் அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.  ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைவர் ராஜமாணிக்கம், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த ஓராண்டு காலத்தில் தமிழகம் புத்துணர்ச்சியோடு, சமூக பொருளாதாரத்தில் மற்றும் தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. புதிய தொழில் வாய்ப்பு, அந்நிய முதலீட்டை ஈர்ப்பதிலும் புதிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. ஈரோட்டில் ஒரு லட்சம் சதுரடி கட்டிட பரப்பளவில் நியோ ஐடி பார்க் (தகவல் தொழில்நுட்ப பூங்கா) அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பயனாக இங்குள்ள பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மேலும், ஜவுளித்தொழில் அதிகம் கொண்ட ஈரோட்டிற்கு மிகப்பெரிய அளவிலான வர்த்தக முன்னேற்றம் அளிக்கும். மேலும், ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் கோபி பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வனவிலங்கு சரணாலயம் ஈரோடு மாநகரை சிறந்த சுற்றுலா தலமாகவும் முன்னேற்றும். வேளாண் பட்ஜெட்டில் சிறுதானிய மண்டலமாகவும், எண்ணெய் வித்து உற்பத்தி மையமாகவும் ஈரோடு மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல், சத்தியமங்கலத்தில் பல்வேறு மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே, மலர் உற்பத்தி மண்டலமாக ஈரோடு மாவட்டத்தை இணைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: