பொது இடத்தில் குப்பை கொட்டியவர்களிடம் 21 லட்சம் அபராதம் வசூல்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டியவர்கள், போஸ்டர் ஒட்டியவர்களுக்கு ரூ.21 லட்சம் அபராதம் விதித்து சென்ைன மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.  இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில்  குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.   

மேலும், சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான கண் கவரும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.10,77,600 அபராதமும், கட்டுமானக் கழிவுகளை கொட்டிய  நபர்களுக்கு ரூ.8,79,900 அபராதமும், அரசு, மாநகராட்சி கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 805  நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு ரூ.1,61,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  

எனவே, பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்கள் மற்றும் காலிமனைகளில் அதிகக் குப்பைகள் காணப்பட்டால், பொதுமக்கள் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: