ராகி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கிருஷ்ணகிரி, மார்ச் 23: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிறுதானிய பயிரான ராகியை, அரசே நேரடியாக கொள்முதல் செய்வதால், ராகி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறு தானியங்களில் முக்கிய இடம்பிடித்துள்ள ராகி, குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற உணவாக உள்ளது. இதன் மகத்துவமும், மருத்துவ குணமும் அளப்பரியது. அதீத சத்துள்ள பாரம்பரிய உணவான ராகியில், கால்சியம் சத்து அதிகமுள்ளதால், எலும்புகளின் வலிமைக்கு உதவுகிறது. மேலும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு, இது உகந்த உணவாகவும் உள்ளது. தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில், தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு மாதம் 2 கிலோ அரிசிக்கு பதிலாக, ராகி வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தின் ஓராண்டிற்கு தேவையான 11 ஆயிரத்து 40 மெட்ரிக் டன் ராகியை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறு, குறு விவாசயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் தாலுகா பாகலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சூளகிரி தாலுகா நல்லாரப்பள்ளியில் உள்ள சாமனப்பள்ளி கூட்டுறவு கடன் சங்கம், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் கெலமங்கலம், சாலிவாரம் மற்றும் பேளகொண்டப்பள்ளி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் என 6 இடங்களில், ராகி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நேரடி கொள்முதல் நிலையங்கள், தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையும் செயல்படும். சிறு, குறு விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த ராகியை, கிரரம நிர்வாக அலுவலரிடம் இருந்து சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் ஆகிய ஆவணங்களின் நகல்களை வழங்கில், கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம்.

அரசு நிர்ணயம் செய்த விற்பனை தொகையை, விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலமாக செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் துண்டுபிரசுரங்கள் அச்சிடப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் ராகி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சூளகிரி, ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ராகி பயிர் சாகுபடி செய்வதில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜூன், ஜூலை மாதங்களிலும், டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் ராகி பயிர் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ராகி சாகுபடி செய்யப்படுகிறது. இதில், சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேரில் ராகி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஹெக்டேருக்கு 1.5 டன் முதல் 2 டன் வரை மகசூல் கிடைக்கிறது. இங்கு உற்பத்தியாகும் ராகி தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்தாண்டு பருவமழை பெய்து ஏரி, குளம் மற்றும் குட்டைகளில் நீர் நிரம்பி, கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாலும், விவசாயிகள் ராகி பயிர் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், நடப்பாண்டு ராகி சாகுபடி பரப்பளவு மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.

Related Stories: