மாவட்டத்தில் 333 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 23: உலக தண்ணீர் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. காவேரிப்பட்டணம் ஒன்றியம் பையூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு, கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பேசியதாவது: ஐக்கிய நாடுகள் சபை, 2023ம் ஆண்டிற்கான உலக தண்ணீர் தினத்தை, தண்ணீர் மற்றும் சுகாதார நெருக்கடியை தீர்க்க மாற்றத்ைத துரிதப்படுத்துதல் என்கிற கருப்பொருளின் அடிப்படையில்  கொண்டாடி வருகிறது. தண்ணீர் விலை மதிப்பில்லா பொருளாக உள்ளதால், பல்லாண்டுகளுக்கு பயன்படுத்தும் வகையில், பாதுகாக்க வேண்டிய தருணத்தில் நாம் உள்ளோம். மழை நீரினை சேகரித்து, சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை செறிவூட்டுதல், நீர் மாசுப்பாட்டை தடுத்தல், மரம் வளர்த்தலை ஊக்குவித்தல், நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் எடுத்து கூறுதல் என உறுதிமொழியை எடுத்துகொண்டு அன்றாட வாக்கையில் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் அறிவுரைகளை பேசினார்.

தொடர்ந்து நடந்த கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை, திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மேலும், கிராமத்திற்கு செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்தும், பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், காவேரிப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவர் பையூர் ரவி, வேளாண் இணை இயக்குநர் முகமது அஸ்லாம், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சாந்தா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, ஆவின் உதவி பொது மேலாளர் டாக்டர் நாகராஜன், பிடிஓ.,க்கள் செந்தில், ரவிச்சந்திரன், தாசில்தார் சம்பத், ஊரக வளர்ச்சித்துறை ஒன்றிய பொறியாளர் சவுந்தர்ராஜன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தாமரைசெல்வி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் ராஜீவ்காந்தி, ஊராட்சி தலைவர் மாதவன், துணை தலைவர் கோபால், ஊராட்சி செயலர் சரவணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: