தண்ணீர் சிக்கனம் குறித்து ஊராட்சிகளில் விழிப்புணர்வு

சேலம், மார்ச் 23: சேலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார். உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. அதன்படி, சேலம் ஊராட்சி ஒன்றியம், தளவாய்பட்டி ஊராட்சிக்குட்பட்ட திருப்பதி கவுண்டனூர் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு பேசினார். ‘தண்ணீர் மற்றும் சுகாதார நெருக்கடியைத் தீர்க்க மாற்றத்தினை துரிதப்படுத்துதல்’ என்ற கருப்பொருளினை அடிப்படையாகக் கொண்டும், அரசின் நிர்வாக நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்திடும் வகையிலும்,  இன்றைய கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராம வளர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன்(குடிநீர்) இயக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, பொதுமக்களிடம் மழைநீரினை சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல், உடைந்த குழாய்களை சரிசெய்து நீர் வீணாகாமல் பாதுகாத்தல், மறுசுழற்சிக்கு உட்படுத்துதல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், நீரின் தூய்மையை பாதுகாத்தல் மற்றும் நீர் மாசுபாட்டைத் தடுத்தல், மரம் வளர்த்தலை ஊக்குவித்தல், வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தல், நீர்  நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல்,  நீர் நிலைகளில் தண்ணீர் சேகரமாக உரிய கால்வாய்களை தூர்வாரி புரைமைத்தல், நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் எடுத்துக் கூறுதல் போன்ற தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது.

அத்துடன், கிராம ஊராட்சிகளில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும், மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டிகளை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள்  தூய்மைப்படுத்தும் பணியினை முறையாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வரின், உலக தண்ணீர் தின நாள் குறித்த விழிப்புணர்வு உரை லேப்டாப் மூலம் காணிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், சேலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மலர்க்கொடி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தமிழரசி, தளவாய்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் ராஜா, ஆணையாளர் திருவேரங்கன், பிடிஓ அனுராதா, தாசில்தார் அருள்பிரகாஷ், ஊராட்சி செயலர் சின்னதம்பி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: