சாலைப்புதூர் ஒழுங்குமுறை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்

க.பரமத்தி: சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் விலை கிலோவுக்கு ரூ.4குறைந்து ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, கரூர் ஆகிய இரு வெவ்வேறு ஒன்றிய பகுதிகளான புன்னம், அத்திப்பாளையம், குப்பம், முன்னூர், தென்னிலை, மொஞ்சனூர், கார்வழி, அஞ்சூர், மற்றும் புகழூர், வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, நடையனூர், மறவாபாளையம், தவிட்டுப்பாளையம், திருக்காடுதுறை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊர்களில் விளையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ள தேங்காய் பருப்பினையும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திங்கள்தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

அங்கு நேற்று நடந்த ஏலத்திற்கு சுமார் 520 மூட்டைகளில் கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.77, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.80, ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.4 குறைந்து ஏலம் போனதால் கவலையடைந்துள்ளனர். இதேபோல தேங்காய் ஏலத்தில் சுமார் 6,720 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய்கள் விலை குறைந்த விலையாக ரூ.20, ஒரு கிலோ தேங்காய் அதிக விலையாக ரூ.26க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.1 குறைந்து ஏலம் போனதால் கவலையடைந்துள்ளனர்.

Related Stories: