ரூ.621 கோடி மதிப்பீட்டில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் நான்கு வழி மேம்பாலம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

தாம்பரம்: சென்னையின் முக்கிய பகுதியாக விளங்கும் அண்ணா சாலையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி மேம்பாலம் ரூ.621 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள முக்கிய வழித்தடங்களில் முதன்மையானது அண்ணா சாலை. கிண்டியில் தொடங்கி புனித ஜார்ஜ் கோட்டை வரை 15 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையை தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. ஏராளமான அரசு அலுவலகங்கள், வணிக நிறுவன கட்டிடங்கள் இந்த சாலையில் அமைந்துள்ளதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

பல்லவன் சாலை, மேற்கு கூவம் நதி சாலை,  சுவாமி சிவானந்தா சாலை, வாலாஜா சாலை, பிளாக்கர்ஸ் சாலை, பீட்டர்ஸ் சாலை,  பின்னி சாலை, ஸ்பென்சர் பிளாசா, ஒயிட்ஸ் சாலை, கிரீம்ஸ் சாலை, லாயிட்ஸ்  சாலை, நுங்கம்பாக்கம் சாலை, கதீட்ரல் சாலை, விஜயராகவா சாலை, தியாகராயா  சாலை, எல்டாம்ஸ் சாலை, வெங்கட் நாராயணா சாலை, சேமியர்ஸ் சாலை, தெற்கு  உஸ்மான் சாலை, தி.நகர் தாலுகா அலுவலக சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, சர்தார்  படேல் சாலை, கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் அண்ணா  சாலையில் சந்திக்கின்றன.இதனால் தினசரி காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். எனவே, இந்த சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி, நேற்று பட்ஜெட் அறிவிப்பில் அண்ணா சாலையில் 4 வழி மேம்பாலம் அமைக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2023-2024 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டசபையில் நேற்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை பெருக்க சாலைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.1407 கோடியில் 148 கி.மீ சாலைகளை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளும், 524 கிலோ மீட்டர் சாலைகளை ரூ.803 கோடி மதிப்பில் இருவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரும் ஆண்டில் ரூ.621 கோடி மதிப்பீட்டில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும். பன்னாட்டுப் பொறியியல் நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்று சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளுக்கு ேமல் கட்டப்பட உள்ள இந்த மேம்பாலம் ஒரு நவீன பொறியியல் சாதனையாக அமையும். இப்பணிகள் நிறைவுற்றவுடன், பல முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, சாலைப் பாதுகாப்பும் மேம்படும். பருவமழை மற்றும் வெள்ளக் காலங்களின்போது, போக்குவரத்து துண்டிக்கப்படாமல் இருக்க ரூ.996 கோடி மதிப்பீட்டில் 215 தரைப்பாலங்களுக்கு பதிலாக உயர்மட்டப் பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சென்னை புறவட்டச் சாலை திட்டத்திற்காக ரூ.1847 கோடியில் சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத்திட்டத்திற்கு ரூ.1500 கோடியும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் 2க்கு ரூ.645 கோடி வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.19,465 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சரின் அறிவிப்பின்படி, மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்கள் அமைந்துள்ள சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான பாதையில் மேம்பாலம் அமைப்பது பெரும் சவாலான காரியம் ஆகும். ஏனெனில் சென்னையின் இதயப்பகுதியே தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உள்ள பகுதிகள் தான். ஏனெனில் மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, மெரினா கடற்ரை ஒரு பகுதியிலும், மறுபகுதியில் முழுவதுவமாக தியாகராய நகர், மேற்கு மாம்பலம் இருக்கிறது.

நந்தனம், தேனாம்பேட்டை, சிஐடி காலனி ஆகிய சிக்னல் தான் மிகவும் முக்கியமான பெரிய சிக்னல்கள் ஆகும். எப்போதுமே இந்த சிக்னல்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும். சென்னையின் ஒரு பகுதியில் இருந்து மறுபகுதி மக்கள் செல்லும் போது, இந்த இடங்களில் தான் சிக்னலில் சிக்கி தவிப்பார்கள். எனவே தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் பெரிய அளவில் குறையும்  என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* திறந்தவெளி திரையரங்கம்

பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ‘‘ஒளிர்மிகு உயிரோட்டமுள்ள பொது இடங்களை நகரங்களில் உருவாக்க தமிழ்நாடு பல முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.  அந்தவகையில், சென்னைத் தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில், இயற்கை வனப்புடன் நகர்ப்புற பொதுச் சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புற வசதிகளை ரூ.50 கோடி செலவில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தும், என்றார்.

Related Stories: