டூவீலரில் விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்தம்

சேலம், மார்ச் 21: சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, டூவீலரில் விதிகளை மீறி நெம்பர் பிளேட் பொருத்திய வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் டூவீலரை ஓட்டிச் செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அதன்படி சேலம் மாநகரில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார், ஹெல்மெட் அணியாமலும், மதுபோதையிலும், விதிகளை மீறியபடியும் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விதிகளை மீறி பைக்கில் வந்தவர்களை மடக்கி பிடித்தனர். குறிப்பாக, டூவீலர் நம்பர் பிளேட்டுகளில் விதிகளை மீறி, அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்களின் படங்களை ஒட்டி வந்தவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அனைவருக்கும் அபராதம் விதித்த போலீசார், இனிமேல் இதுபோன்ற தேவையற்ற ஸ்டிக்கர்களை பைக்கில் ஒட்டக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: