வெயிலின் தாக்கத்தை சமாளிக்க வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகளுக்கு ஷவர் குளியல்

சென்னை: வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு ஷவர் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரியவகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனைக் காண தினம்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு ஷவர் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் கோடை வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக வெயில் காலம் வந்தால் விலங்குகளின் தற்காப்புக்காக பல்வேறு ஏற்பாடுகளை பூங்கா நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்வார்கள். தற்போது இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் முன்னதாகவே தொடங்கியுள்ளது. வண்டலூர் பூங்காவில் ரோகிணி மற்றும் பிரகதி என 2 யானைகள் உள்ளன. இதில் தற்போது ரோகிணி யானை உற்சாகமாக ஷவரில் ஆனந்தமாய் குளித்துக் கொண்டிருக்கிறது.  வண்டலூர் பூங்காவில் சிங்கம், புலி, குரங்கு என பல்வேறு விலங்குகள் இருந்தாலும் யானைக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. வெயில் உச்சியில் ஏற ஏற யானையால் தாங்க முடியாது. எனவே தண்ணீரை தேடிக்கொண்டு ஓடி ஷவர் முன்னால் நின்று வெயில் போகும்வரை, தன் உடம்பை ஆட்டி ஆட்டி குளிக்கிறது. பூங்காவில் யானை குளிக்கும் அழகை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

Related Stories: