திருவள்ளூரில் எண்ணும் எழுத்தும் திட்டம் விழிப்புணர்வு பிரசார வாகனம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்  தொடங்கி வைத்தார். அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். இதன் நோக்கம் வருகின்ற 2025ம் ஆண்டிற்குள் 8 வயதிற்குட்பட்ட மாணவர்கள் அனைவரும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை பெறவேண்டும் என்பதேயாகும். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 16 லட்சம் மாணவர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 53,223 மாணவர்களும் அடிப்படைக் கற்றலில் வளம்பெறுவார்கள். 1 முதல் 3ம் வகுப்புகளில் மாணவர்கள் கற்றல்நிலை அடிப்படையில் அரும்பு, மொட்டு, மலர் என்று பிரிக்கப்பட்டு கற்பித்தல் நடைபெறுகிறது.

இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் வடக்கு ராஜவீதியில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பிரச்சார வாகனத்தை நேற்று பச்ைசக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் த.ராமன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மோகனா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் டீ.மீகாவேல், வட்டார கல்வி அலுவலர்கள் ஏ.எஸ்.குமார், எம்.பி.மோகன், ஆனி பெர்டீசியா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.கந்தசாமி, ஷோபா, சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தாமரைப்பாக்கம் கூட்டுரோடு மற்றும் ஆவடி பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களுக்குச் சென்று நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எண்ணும் எழுத்தும் சார்ந்த கருத்துகள், கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கப்பட உள்ளன. எனவே அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: