பங்குனி மாத மழை; விவசாயிகள் பாதிப்பு: நிவாரணம் வழங்க கோரிக்கை

திருத்தணி:  திருத்தணி மற்றும் திருவலங்காடு ஒன்றியங்களில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் விவசாயி மற்றும் விவசாயக் கூலிகளாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் நெல், கரும்பு, வேர்க்கடலை, எள், உள்ளிட்ட பயிர்களும், மா மரம், பூச்செடிகள் உள்ளிட்ட தோட்ட பயிர்களை தங்கள் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ளனர். பல விவசாயிகள் கடன் வாங்கி கடுமையான போராட்டத்திற்கு நடுவே விவசாயத்தை போராடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அறுவடை நிலையில் நெற்பெயர்கள் 100 ஏக்கர் பரப்பளவில் தயார் நிலையில் உள்ளன. 200 ஹெக்டேர்  மேல் பூச்செடிகளும் வளர்த்து வருகின்றனர். இதேபோன்று 300 ஏக்கர் பரப்பளவில் மாமரம் வைத்து விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளை விட மாமரத்தில் அதிக அளவு பூக்கள் பூத்து குலுங்கி இருந்தன.

இதனால் விவசாயிகள் பெரிதும் சந்தோஷத்தில்  இருந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக திருத்தணி மற்றும் அதனை சுற்றுப்புற பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை சிறிது நேரம் பெய்தது. இதனால் காற்று அதிக வேகத்தில் வீசியதால் மாமரத்தில் பூத்துக் குலுங்கி இருந்த பூக்கள் உதிர்ந்து விட்டன. இதைக் கண்ட விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தப் பூக்கள் பூத்திருந்தால்  மாமர தோட்ட  பயிர் விவசாயிகளுக்கு  அதிகப்படியான மகசூல் கிடைத்திருக்கும். வருமானமும் அடைந்திருப்பார்கள். சிறிது நேரம் பெய்த மழையில் காற்றில் அந்த பூக்கள் மொத்தம் உதிர்ந்து காரணத்தால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். அதே நேரத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாக ஒட்டிக்கொண்டது. இதன் காரணமாக மீண்டும் விவசாய நிலத்தில் முளைவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நெல் பயிர் விவசாயிகள் பெரிய நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.  எனவே சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை  மாநில அரசு வழங்க முன்வர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளன.

Related Stories: