உப்புபள்ளம் பகுதியில் இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

சத்தியமங்கலம், மார்ச்20:  பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சி 3வது வார்டுக்குட்பட்ட உப்பு பள்ளம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. 30 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்து மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் நீர்த்தேக்க தொட்டியின் மேற்பகுதி கான்கிரீட் முழுவதுமாக இடிந்து நீர்த்தேக்கத் தொட்டிக்குள் விழுந்து விட்டதால் கடந்த 10 நாட்களாக இந்த நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இது குறித்து பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முறையிட்டபோது புதியதாக மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டுவதற்கு நிதி இல்லை என கூறியதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்துவிட்டு புதியதாக மேல்நிலை நீர்த்தேக்க கட்டி சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: