நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் தவாக நிர்வாகி வீட்டில் நகை, பணம் கொள்ளை

வடலூர், மார்ச் 19: தவாக நிர்வாகி வீட்டின் கூரையை பிரித்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் பெரியார் நகரில் வசித்து வருபவர் கனகசபை மகன் முருகன் (40). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இவரது மனைவி ரமீஷா பேகம். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் முருகன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று அதிகாலை வீட்டுக்கு திரும்பியபோது வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள், துணிமணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. குடும்பத்தினர் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கூரையை பிரித்து உள்ளே இறங்கி பீரோவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இவற்றின் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும். தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: