கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: ரூ.23 லட்சம் தப்பியது

கும்மிடிப்பூண்டி, மார்ச் 19: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக ரூ.23 லட்சம் தப்பியது. இந்த சம்பவத்திற்கு காரணமான மூன்று மர்ம நபர்களை போலீசார் சிசிடிவி காட்சிகள் வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோமொபைல், மின் உற்பத்தி, கேஸ்டிங் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, செங்குன்றம், சென்னை, ஆரம்பாக்கம், தடா, சத்தியவேடு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், எல்லாபுரம், பழவேற்காடு, சின்ன மாங்கோடு, சூளூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மேற்கண்ட தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்கள் வேலைக்காக வந்து செல்கின்றனர்.

இங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக, ஆச்சி மிளகாய் தூள் தொழிற்சாலை எதிரே எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம், சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதனை அனைத்து தரப்பு பொதுமக்கள் மற்றும் வடமாநில இளைஞர்களும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், மேற்கண்ட ஏடிஎம்மில் நேற்று அதிகாலை சுமார் 1.45 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் இரு பைக்கில் வந்தனர்.  எஸ்பிஐ ஏடிஎம்மில் கொள்ளையடிக்க இருவர் உள்ளே சென்றுள்ளனர். ஒருவர் வெளியே பைக்கில்  நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது, ஏடிஎம்மில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி அலாரம் ஒன்று திடீரென ஒலித்தது. இதனால், சம்பந்தபட்ட  நிறுவனத்தின் நிர்வாக அலுவலரின் செல்போன் எண்ணிற்கு  எச்சரிக்கை மணி அடித்தது. இதனால், சுதாரித்துக் கொண்டவர், உடனே சிப்காட் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்ப்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

உடனே, விரைந்து வந்த போலீசார் ஏடிஎம் மையத்தை  நெருங்கும் பொழுது சுதாரித்துக்கொண்ட அந்த மூன்று மர்ம நபர்களும் தங்கள் கொண்டுவந்திருந்த பைக்குகள் மூலம் அங்கிருந்து  தப்பி ஓடிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகள்  7 மணியளவில்  விரைந்து வந்தனர்.  மேற்கண்ட ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்த இடத்தை பார்வையிட்டனர். அதில் அதிர்ஷ்டவசமாக ரூ.23 லட்சம் தப்பியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சிப்காட் தொழிற்பேட்டை உள்ள ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், துணை ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் இரு தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு மர்ம நபர்களை   போலீசார் தீவிரமாக  வலை வீசி தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories: