உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 1,33,966 பேருக்கு பணி நியமன ஆணை: வேலை வாய்ப்பு முகாமில் அமைச்சர் பேச்சு

ஆவடி, மார்ச். 19: திருவள்ளூர் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெற்றது. இதில், 18 முதல் 35 வயதுடையோர், 8ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை கலந்து கொள்ளலாம் என்ற கூறப்பட்டதால் 10,000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தனியார் நிறுவன வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு அமைச்சர் பணி நியமன ஆணை வழங்கினார். அதோடு 41 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கான இருச்சக்கர வாகனத்தை வழங்கி அவர்களுக்கு தலை கவசத்தை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நாசர், தமிழ்நாடு முதல்வரின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று இந்நாள் வரை 85 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம், 1066 சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்று, அதில் 1900 மாற்றுத்திறனாளி உட்பட ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 715 பேர் தமிழக முழுவதும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் மாற்றுத்திறனாளிகள் அவரவர்களின் தகுதிக்கேற்ப பணியில் அமர்த்தப்பட்டது தமிழக முதல்வரின் சாதனை என குறிப்பிட்டார். அதோடு உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புக்காக சுமார் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 76 மனுக்கள் பெறப்பட்டு, இதுவரை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 966 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், மாநகர செயலாளர் சன்பிரகாஷ், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், பகுதி செயலாளர்கள் ராஜேந்திரன், நாராயண பிரசாத், பொன் விஜயன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: