புதுமண தம்பதியை கறி விருந்துக்கு வீட்டுக்கு அழைத்து 35 சவரனை திருடிய சகோதரியின் கணவர் ஓராண்டுக்கு பிறகு கோவையில் சிக்கினார்: பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: புதுமண தம்பதியை கறி விருந்துக்கு விட்டிற்கு அழைத்து, 35 சவரன் நகைகளை திருடிய சகோதரியின் கணவரை போலீசார் ஓராண்டுக்கு பிறகு கோவையில் கைது  செய்தனர். மயிலாப்பூர் அப்பா சுவாமி கோயில் தெருவை சேர்ந்தவர் நரேந்திரன் (26). மென் பொறியாளரான இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது, நரேந்திரனுக்கு உறவினர்கள் சிலர் விருந்து வைத்துள்ளனர். அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி கே.கே.நகரில் உள்ள தனது சித்தி மகள் வனிதா வீட்டிற்கு தனது மனைவியுடன் கறி விருந்துக்கு சென்றுள்ளார். மறுநாள் வீட்டிற்கு வந்த நரேந்திரன், தனது மனைவிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடத்தினார். அப்போது, தாலி கயிறில் சேர்ப்பதற்காக பீரோவில் வைத்திருந்த குண்டு மணி மற்றும் கால் காசுகளை எடுக்க சென்றபோது, பீரோவில் வைத்திருந்த 35 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது.

வீட்டின் பூட்டு உடைக்கப்படாமலும், வீட்டிற்கு உறவினர்கள் தவிர வேறு யாரும் வராத நிலையில், நகைகள் மட்டும் மாயமாகி இருந்ததால் நரேந்தரன் அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி வீட்டிற்கு வந்த உறவினர்களிடம் விசாரணை நடத்தியும் நகைகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நரேந்திரன் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று ஆய்வு செய்த போது, அதில் கே.கே.நகரில் வசித்து வரும் நரேந்திரனின் சித்தி மகள் வனிதாவின் கணவர் சுரேஷ் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. உடனே போலீசார், வனிதாவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், விருந்துக்கு நரேந்திரன் தங்களது வீட்டிற்கு வந்திருந்த நேரத்தில், யாருக்கும் தெரியாமல் அவரது வீட்டிற்கு சென்று தனது கணவர் சுரேஷ், நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

அதைதொடர்ந்து போலீசார் சுரேஷை பிடிக்க முயன்றனர். ஆனால், போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று அவர் தலைமறைவாகி விட்டார். சுரேஷ் எங்கு சென்றார். என்பது குறித்து யாரும் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.  இதற்கிடையே சுரேஷ் தலைமறைவாக இருந்த போது பயன்படுத்திய செல்போன் எண் தற்போது பயன்பாட்டில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அந்த செல்போன் சிக்னலை போலீசார் ஆய்வு செய்த போது, கோவை மதுக்கரை குரும்பபாளையம் ராமண்ணா தோட்டம் பகுதியில் இருப்பதாக சிக்னல் காட்டியது. உடனடியாக, மயிலாப்பூரில் இருந்து தனிப்படை போலீசார் கோவை சென்று அங்கு ஓராண்டாக பதுங்கி இருந்த சுரேஷை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் சுரேஷ் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: மனைவியின் பெரியம்மா மகன் நரேந்திரனுக்கு திருமணம் நடந்தது. உறவினர் என்ற முறையில் புதுமண தம்பதியை வீட்டிற்கு அழைத்து கறி விருந்து அளித்தோம். அப்போது நரேந்திரன், திருமணத்தின் போது தனது மனைவிக்கு சீர்வரிசையாக வந்த நகைகள் அனைத்தும் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். இதனிடையே, நரேந்திரன் தனது பைக் சாவியுடன் வீட்டு சாவியை வைத்திருந்ததை கண்டேன். உடனே, நரேந்திரன் வீட்டில் உள்ள நகைகளை திருட வேண்டும், என எண்ணம் தோன்றியது. இதனால், நரேந்திரனிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி, அவரது பைக்கை வாங்கிக் கொண்டு, நேராக மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தேன்.

சாவி மூலம் வீட்டை திறந்து பீரோவில் வைத்திருந்த 35 சவரன் நகைகளை எடுத்து கொண்டு, யாருக்கும் சந்தேகம் வராதபடி மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டேன். பிறகு புதுமண தம்பதியை சந்தோஷமாக வழி அனுப்பி வைத்தோம். மறுநாள் தனது வீட்டில் இருந்த நகைகள் காணவில்லை என்று நரேந்திரன் தெரிவித்தார். உடனே நான் நரேந்திரனுக்கு ஆறுதல் கூறினேன். ஆனால் நரேந்திரன் வீட்டின் எதிரே இருந்த சிசிடிவி கேமராவால் நான் மாட்டிக் கொண்டேன். தலைமறைவாக வாழ்ந்த நிலையில் ஓராண்டுக்கு பிறகு போலீசார் எப்படி கண்டுபிடிப்பார்கள் என்று நினைத்து பழைய செல்போன் எண்ணை பயன்படுத்தியதால், சிக்கிக் கொண்டேன். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: