திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு வாரம் நடைபெற்றது தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழா: தமிழறிஞர்கள் கவுரவிப்பு

திருவள்ளூர், மார்ச் 18: திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழா ஒரு வாரம் நடைபெற்றது. ஆட்சிமொழி சட்டவார விழா கொண்டாட்டங்களின் முதல் நாளான கடந்த 9ம் தேதி பூந்தமல்லி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ம.இராம்குமார் தலைமையில் ஆட்சி மொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பூந்தமல்லியில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், தமிழமைப்புகள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் கலந்துகொண்டனர். இரண்டாம் நாளான 10ம் தேதி திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள், தமிழமைப்புகள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் முன்னிலையில் தமிழ்மொழி தனது தொன்மையால் வாழ்கிறதா!, புதுமையால் வாழ்கிறதா! என்னும் தலைப்பில் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் செ.சுதா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.

மூன்றாம் நாளான 11ம் தேதி ஊத்துக்கோட்டை அனைத்து வணிகர்கள் சங்கத்தில் கும்மிடிப்பூண்டி, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் மற்றும் வணிகர் சங்கத் தலைவர் கோ.நடராஜன் ஆகியோர் தலைமையில் வணிகச் சங்கங்கள், நிறுவனங்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இதனைத்தொடர்ந்து 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களும் திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் அரசு அலுவலகப் பணியாளர்களுக்கு கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடு, ஆட்சிமொழி மின்காட்சியுரை, சிறந்த குறிப்புகள், வரைவுகள் ஆகிய தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

ஆட்சிமொழிச் சட்டவார விழா நிகழ்ச்சிகளின் நிறைவு நாளில் தமிழ் ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி, திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து தொடங்கி வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன் கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியிலும் கலந்துகொண்டார். பேரணி தொடங்குவதற்கு முன்பாக அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மூன்று பேருக்கு மாதந்தோறும் உதவித்தொகை ₹3500ம், மருத்துவப்படி ₹500ம் பெறுவதற்கு அரசாணைகள் வழங்கப்பட்டன.

மேலும், தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய அரசுப்பணியாளர்கள் இரண்டு பேருக்கு முதல் பரிசாக ₹3000ம் வீதம் காசோலைகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இப்பேரணியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், வணிகச்சங்க அமைப்புகளின் தலைவர்கள், வணிக நிறுவன உரிமையாளர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள்  கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிகளை திருவள்ளுர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் இரா.அன்பரசி ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியின் போது தமிழ் வளர்ச்சித்துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: