அம்மாபேட்டையில் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையில் முதலமைச்சர் படம் அகற்றியதால் பரபரப்பு திமுகவினர் போராட்டத்தால் மீண்டும் படம் வைக்கப்பட்டது

பவானி, மார்ச்17: அம்மாபேட்டை - அந்தியூர் ரோட்டில் அம்மாபேட்டை பிரிவு அருகே ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை உள்ளது. இந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்தை வங்கி ஊழியர்கள் அகற்றி விட்டனர். இந்த நிலையில், வங்கிக்கு பண பரிவர்த்தனை தொடர்பாக நேற்று முன்தினம் சென்ற திமுக அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் பங்க் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள், முதலமைச்சரின் படம் இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு, மீண்டும் படத்தை வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், வங்கி நிர்வாகத்திடம் என்ன காரணத்தால் அகற்றப்பட்டது எனக் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன் மற்றும் திமுகவினர் வங்கிக்குச் சென்று முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்தை மீண்டும் வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இத்தகவலறிந்த திமுகவினர் வங்கிக்கு முன்பாக திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, வங்கி ஊழியர்கள் படங்கள் அகற்றப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்ததோடு, மீண்டும் படத்தை அலுவலக வளாகத்தில் பொருத்தினர். இதனால், திமுகவினர் கலைந்து சென்றனர். அதிமுகவைச் சேர்ந்த சிலரின் தூண்டுதலால் முதலமைச்சரின் படம் அகற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Related Stories: