ஓட்டுநர் இல்லாமல் ஓடும் தானியங்கி மெட்ரோ ரயில்கள் ₹1,620 கோடியில் அதிநவீன சிக்னல் ரயில் இயக்க கருவிகள் வாங்க ஒப்பந்தம்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை, மார்ச் 16: ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி மெட்ரோ ரயில்களை இயக்க ₹1620 கோடி மதிப்பில் அதிநவீன சிக்னல், ரயில் இயக்க கட்டுப்பாடு கருவிகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணி நிறைவின்போது வழித்தடம் 3, 4 மற்றும் 5ல் ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதற்கான மிக முக்கிய தேவையான சிக்னல், ரயில் இயக்க கட்டுப்பாடு, காணொலி மேலாண்மை அமைப்பு அவசியமாகிறது. இந்த அதிநவீன தொழில்நுட்பத்திற்கான கருவிகள் ₹1620 கோடி மதிப்பில் வாங்க ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் எஸ்பிஏ மற்றும் ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய கூட்டு நிறுவனத்திற்கு ஒப்பந்தமாகியுள்ள.

இந்த ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள்  மற்றும் இயக்கம்) மற்றும் ஹிட்டாச்சி நிறுவனத்தின் குழு இயக்குநர் மனோஜ  கிருஷ்ணப்ப குமார் ஆகியோர்  கையெழுத்திட்டனர். நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஆலோசகர் மனோகரன்,  துணை ஆலோசகர் சங்கரமூர்த்தி, பொது ஆலோசகர் குழு தலைவர் டோனி புசெல்,  முதன்மை விற்பனை மேலாளர் ராமன் குமார் செஹ்கல் மற்றும் பலர் உடனிருந்தனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ₹1620 கோடி மதிப்பில், சமிக்ைஞ, ரயில் இயக்க கட்டுப்பாடு, காணொலி மேலாண்மை அமைப்பினை வடிவமைத்து. உற்பத்தி செய்து, நிறுவி, சோதித்து செயல்படுத்துதல் போன்றவற்றிற்கு ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் எஸ்பிஏ மற்றும் ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் கூட்டமைப்புக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

பிரத்யேகமாக தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு ரயிலை இயக்க ஓட்டுநர் தேவையின்றி தானாகவே இயங்க வழிவகுக்கிறது. இந்த சிறப்பான அமைப்பு, பன்னாட்டு தரங்களின் அடிப்படையில் அமைய உள்ளது. இந்த ஒட்டுமொத்த அமைப்பும் குறைந்தபட்சம் 90 வினாடி இடைவெளியில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி ரயில்களை இயக்கும் திறன் கொண்டதாக இருக்கும். ஓட்டுநர் இல்லாமல் ரயில் தானியங்கி அடிப்படையில் இயக்கப்படுவதோடு இல்லாமல், பணிமனைக்குள் ரயில்கள் வந்து செல்வதும், நடைமேடை தடுப்பு கதவுகளின் செயல்பாடு, பயணிகளுக்கான தகவல் மற்றும் காட்சி அமைப்புகளுடனும் ஒருங்கிணைக்கப்படும்.

இந்த அமைப்பு, மேலாண்மை, கண்காணிப்பு மற்றும் இயக்கக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வரும் கட்டுப்பாட்டு சமிக்ஞை ஆகியவற்றை குறித்த நேரத்தில் காணொலியை காட்சிப்படுத்த வகை செய்கின்றது. 118.9 கி.மீ. நீளம் கொண்ட சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 2 பணிமனைகள், 113 மெட்ரோ ரயில் நிலையங்கள், 138 ரயில்கள் மற்றும் 3 பராமரிப்பு ரயில்களுக்கு சிக்னலிங், ரயில் கட்டுப்பாடு மற்றும் வீடியோ மேலாண்மை அமைப்பு ஆகியவை இந்த பணியில் அடங்கும். இப்பணிகள் அனைத்தும் 2027ம் ஆண்டின் இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த அமைப்பும் இந்தியாவின் மிகப்பெரிய மெட்ரோ சிக்னலிங் தொகுப்பு ஆகும்.

1000க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் இயக்க திட்டம்

மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பயணிகள் வசதிக்காக 1000க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் 54.1 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது இரண்டாம் கட்டத்தில் 118.9 கி.மீ தொலைவிற்கு மூன்று வழிதடங்களில் மும்முரமாக பணிகள் நடந்து வருகிறது. பயணிகளின் வசதிக்காக இணைப்பு வாகனங்கள் இயக்குவது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருகிறது.

2026ம் ஆண்டு அனைத்து பணிகளும் நிறைவடைந்து சில மணி நேர்த்திலேயே நகரின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் மெட்ரோ அமைய உள்ளது. தற்போதுள்ள சூழலில் அதிகபட்சமாக நாளொன்றுக்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்யும் நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணியின் இறுதியில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப மூன்று முதல் ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ பயணிகளின் வருகையை அதிகரிக்க ரயில் நிலையத்திலிருந்து மற்ற பகுதிகளுக்கு இணைப்பு வாகன வசதி முக்கியமான ஒன்றாக உள்ளது. பேருந்துகள், சிற்றுந்துகள் ஏற்கனவே இயக்கப்படும் நிலையில் அதை தாண்டி மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து முதல் கட்டமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகள், அலுவலகங்கள், நிறுவனங்களை இணைக்கும் வகையில் இந்த இணைப்பு வாகன வசதி இருக்கும். இணைப்பு வாகனங்களில் நியாயமான கட்டணம் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக சில தனியார் நிறுவனங்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: