பட்டாபிராம் இந்து கல்லூரியில் 18ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்

திருவள்ளூர், மார்ச் 16: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் நோக்குடன், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 18ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணியளவில் பட்டாபிராம், தர்மமூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.  இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெஷின் ஆபரேட்டர், வெல்டர், பிட்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரிசியன், புரொடக்சன் ஆபரேடர், சேல்ஸ் மேனேஜர், டிரைவர், எச்.ஆர் எக்சிகியூட்டிவ், டெவலப்மெண்ட் மேனேஜர் போன்ற பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படும்.

அயல்நாட்டு வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டல், திறன் பயிற்சிகளுக்கான பதிவு, ஆள் சேர்ப்பு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு அரங்கு மற்றும் சுய வேலைவாய்ப்பு, உணவு பாதுகாப்பு, ஆவின், பொது சுகாதாரம் போன்ற சேவைகள் வழங்க உரிய துறைகளின் மூலம் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. இம்முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் அரசு வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பொறியியல்,  நர்சிங் கல்வித் தகுதியுடையவர்கள் மற்றும் முதுநிலை மேலாண்மை படித்தவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள்  அன்று தங்களுடைய 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன்  கலந்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

Related Stories: