அவினாசி-அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளங்களை சேர்க்க வலியுறுத்தல்

ஈரோடு: அவினாசி-அத்திக்கடவு திட்டத்தின் கீழ் பெருந்துறை பகுதியில் விடுபட்டுள்ள குளங்களை முழுமையாக சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.  பவானி ஆற்றில் இருந்து உபரியாக வெளியேறும் தண்ணீரை குழாய்கள் மூலம் எடுத்துசென்று ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளில் நிரப்பும் வகையில் அவினாசி-அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.   நிலத்தடி நீர் செறிவூட்டும் இத்திட்டத்திற்காக பவானியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக திட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. ஒரு சில இடங்களில் சாலைப்பணிகள் நடைபெற்று வருவதாலும், சிறிய குளங்களுடன் இணைக்கப்பட்டுள்ள குழாய்களில் நீர் கசிவுகள் உள்ளதாலும் திட்டம் முழுமை பெறாமல் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1045 குளம், குட்டைகள் பயனடைய உள்ளன.

இந்நிலையில், 15 குளங்கள் சிவில் வழக்குகளால் திட்டத்தில் சேர்க்கப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது. விடுபட்டுள்ள அனைத்து குளங்களையும் திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.  இது குறித்து பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி கூறியதாவது : அவினாசி- அத்திக்கடவு திட்டத்தின் கீழ் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டுவதன் மூலம் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் உயர வழிவகுக்கும்.

இத்திட்டத்தின் கீழ் பெருந்துறை பகுதியில் விடுபட்டுள்ள குளங்களை சேர்க்க வேண்டும் என்று ஏற்கனவே அரசுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சிவில் வழக்குகள் தொடர்பாக ஏற்கனவே சேர்க்கப்பட்ட திட்டத்தில் 15 குளங்கள் சேர்ப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே பெருந்துறை சிப்காட் வளாகத்தை சுற்றி உள்ள அனைத்து குளங்களையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: