பல்வேறு துறைகளின் சார்பில் ₹2 கோடி மதிப்பில் 318 பேருக்கு நல உதவிகள்

கிருஷ்ணகிரி, மார்ச் 14: கிருஷ்ணகிரியில், பல்வேறு துறைகளின் சார்பில், 318 பயனாளிகளுக்கு ₹2.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். எம்எல்ஏ.,க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் முன்னிலை வகித்தனர். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று, திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ், 80 பேருக்கு ₹38.75 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கம், வருவாய்த்துறை சார்பில் 100 பேருக்கு ₹12 லட்சம் மதிப்பில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், 5 பேருக்கு ₹5 லட்சம் மதிப்பில் விபத்து நிவாரணம், 47 பேருக்கு சாதி சான்று(மலையாளி), பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு ₹65 ஆயிரம் மதிப்பில் தையல் இயந்திரங்களை வழங்கினார்.

மேலும், தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ₹3 ஆயிரம் மதிப்பில் விதை தெளிப்பான், ஒரு பயனாளிக்கு ₹9 ஆயிரம் மதிப்பில் மா ஒட்டுச்செடி, ஒரு பயனாளிக்கு ₹9 ஆயிரம் மதிப்பில் எலுமிச்சை பதியம் செடி, ஒரு பயனாளிக்கு ₹1.48 லட்சம் மதிப்பில் சொட்டுநீர் பாசனம், பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேருக்கு ₹60 ஆயிரம் மதிப்பில் கருவிகள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 67 பேருக்கு ₹1.44 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கடன் என மொத்தம் 318 பயனாளிகளுக்கு ₹2 கோடியே 2 லட்சத்து 81 ஆயிரத்து 526 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அறிவித்த அனைத்து திட்டங்களுக்கும், போதிய நிதி ஒதுக்கப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறுவதை கண்காணிக்க, 57 துறைகளைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளுக்கு இணையாக, தொழில்துறையில் வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்துவதற்கு, ஆக்கப்பூர்வமான கருத்துக்களை துறை சார்ந்த அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்கள் முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று, அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளும் நிறைவேற்றப்படும்,’ என்றார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் கலெக்டரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருமான வந்தனாகார்க், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, ஓசூர் மாநகராட்சி ஆணையர் சினேகா, சப்-கலெக்டர் சரண்யா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: