மாநகராட்சி மண்டலம் எண் 4ல் மேயர் ஆய்வு: சாலை, மழைநீர் வடிகால் வசதி அமைத்துதர பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி, மார்ச் 10: திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் 4ல் சாலைவசதி, மழைநீர் வடிகால் வசதி கேட்டு பொதுமக்களின் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற ஒப்பந்தகாரர்களுக்கு மேயர் அன்பழகன் உத்தரவிட்டார். திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டு பகுதிகளிலும் பாதாள சாக்கடைக்கான குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் 50 ஆண்டுகள் கடந்த பழைய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெற்ற பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், மாநகரை தூய்மைப்படுத்தும் விதமாக குப்பைகள் இல்லாத நகரமாக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த பணிகளை மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளுக்கு நேரிடையாக சென்று ஆய்வு செய்து வருகிறார். அதுபோல், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகரில் நடந்து வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். இதில், திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் 4ல் வார்டு எண் 51 பீமநகர் வடக்கு எடத்தெரு, தேவர் புதுதெரு, பொன்விழா தெரு ஆகிய பகுதிகளில் மேயர் அன்பழகன் பொதுமக்களை நேரில் சந்தித்து அடிப்படை வசதிகளை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மண்டலத் தலைவர் துர்காதேவி, பொன்மலை மண்டல உதவி ஆணையர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வின்போது, அப்பகுதி பொதுமக்கள் சாலை வசதி, மழைநீர் வடிகால், குடிநீர் அடி பம்பு உள்ளிட்டவை கேட்டு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மக்களுக்கான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர அருகில் இருந்த அலுவலர்களுக்கு மேயர் அன்பழகன் உத்தரவிட்டார். தொடர்ந்து பொன்விழா தெருவில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்ட மேயர் அன்பழகன் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்தக்காரர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, வார்டு எண் 64ல் குறிஞ்சி நகர் மற்றும் பாண்டியன் நகர் பகுதியில் குடியிருப்பு நல சங்கத்தினருடன் மேயர் அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில் குடியிருப்பு நலச் சங்கத்தினர் தங்கள் பகுதியில் நடைபெற்று வரும் புதைவடிகால் திட்ட பணிகளை விரைந்து முடித்து தரவும், சாலை அமைந்து தரவும், பூங்கா புதிதாக அமைத்து தரவும்., குடிநீர் வழங்குவதில் கூடுதல் நேரம் கேட்டு ஆலோசனை கூறி, கோரிக்கைளை மனுவாகவும் அளித்தனர். அப்போது அப்பகுதியில் குடிநீர் வழங்குவதில் கூடுதல் நேரம் கொடுக்கும்படி பொறியாளர்களுக்கு மேயர் அன்பழகன் உத்தரவிட்டார். மேலும், இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிக்கப்பட்டவுடன் சாலைகள் அமைத்து தருவதாகவும் குடியிருப்பு நல சங்கத்தினரிடம் உறுதி அளித்தார்.முன்னதாக சாத்தனூரில் செயல்பட்டு வரும் அம்மா கிளினிக்கை பார்வையிட்டார். அப்போது அப்பகுதி பொது மக்களுக்கு அடிப்படை மருத்துவத்தை தினந்தோறும் வழங்கவும் ஆலோசனை வழங்கினார்.

Related Stories: