நெல்லையில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

நெல்லை, மார்ச் 9:  நெல்லை வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின விழா குத்துவிளக்கேற்றி கொண்டாடப்பட்டது. விழாவில் பிஎப் மண்டல ஆணையாளர் சச்சின் ஷெட்டி தலைமை வகித்து பேசினார். உதவி ஆணையாளர் குமாரவேல் முன்னிலை வகித்தார். இயற்கை விவசாயத்தின் மகத்துவம் குறித்து இயற்கை விவசாயி லட்சுமி தேவி பேசினார். தேசிய போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற சுனி சுரேஷ் கவுரவிக்கப்பட்டார். போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கணக்கு அதிகாரி கவுரி பாஸ்கர் பேசினார். விழாவை நித்திய கல்யாணி தொகுத்து வழங்கினார். குழந்தைகளின் சிலம்பாட்டம், நடனம், பாடல் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. மகளிர் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி நன்றி கூறினார்.

நெல்லை ஷிபா மருத்துவமனை சார்பில் உலக மகளிர் தின விழா, மருத்துவமனை வளாகத்தில்  கொண்டாடப்பட்டது. மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி தலைமை வகித்தார். மகளிர் நல மருத்துவர் டாக்டர் ராதா, கேக் வெட்டி மகளிர் தினம் சிறப்புகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனை டாக்டர்கள் ஜியாவுல்லா, சரண்யா, ரம்யா, அகமது யூசுப் மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள், ஷிபா கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் சாந்தா மரியா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நீதிபதி தேவி கலந்து கொண்டு பேசினார். இதில் டாக்டர்கள் மகாலட்சுமி, சுஜாதா, சித்ரா, சிவரஞ்சனி, உமா கல்யாணி, டாக்டர் ஏஞ்சலின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பேராசிரியைகள், மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சி நடந்தது. ஆடிப்பாடி மகிழ்ந்து செல்பி எடுத்துக்கொண்டனர். சிறப்பு ரங்கோலி கோலமிட்டனர்.

 தமிழ்நாடு சட்டக்கல்வி இயக்குநர் விஜயலட்சுமி வழிகாட்டுதலின்படி, நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் லதா தலைமை வகித்தார். இணைப்பேராசிரியர் கிறிஸ்துஜோதி வரவேற்றார். விழாவில் நெல்லை தொழிலாளர் துறை இணை ஆணையர் சுமதி கலந்து கொண்டு சட்டக்கல்லூரி மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மகளிர் தினம் குறித்து பேசினார். விழாவில் அனைத்து பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், சட்டக்கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். என்எஸ்எஸ் அலுவலரும், உதவி பேராசிரியருமான சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

நெல்லை மாவட்ட ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் மகளிர் தினவிழா நெல்லையில் கொண்டாடப்பட்டது. மண்டல மகளிர் அணி அமைப்பாளர் தேவிகா தலைமை வகித்தார். மாவட்ட கருவூல அலுவலர் சாரா மாக்கரெட் சாதனையாளர் மகளிருக்கு விருது வழங்கி பேசினார். துணைத்தலைவர் பொன்னம்மாள் வரவேற்றார். அருங்காட்சிக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி, அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வானொலி நிலைய அறிவிப்பாளர் சந்திரபுஷ்பம், ஊராட்சி நகர் சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் விஜயலட்சுமி, அரசு அலுவலர் ஒன்றிய மகளிரணி மாநில செயலாளர் மீனாட்சி, ஓய்வூதியர் சங்க துணைத்தலைவர் சீத்தாராமன், மாநில துணை தலைவர் நல்லபெருமாள் மற்றும் பலர் பேசினர். பல்வேறு பிரமுகர்கள் விருது பெற்றனர். கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. பொருளாளர் விஜயா நன்றி கூறினார்.

நெல்லை பாளையங்கோட்டை அஞ்சல் பொருள் கிடங்கில் உலக மகளிர் தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அஞ்சல் பொருள் கிடங்கில் பணிபுரியும் மகளிர் அனைவருக்கும் ஆண்கள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

 மகளிர் தினத்தை முன்னிட்டு நெல்லை அறிவியல் மையத்தில மகளிர் சிறப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் கணினி பொறியியல் வல்லுனர்  பழனிராஜன் பங்கேற்று கைப்பேசி மற்றும் கணினிகள், லேப்டாப் போன்ற தகவல்  தொடர்பு சாதனங்களை பெண்கள் பயன்படுத்தும்போது மேற்கொள்ள ேவண்டிய பாதுகாப்பு  நெறிகள் குறித்து படக்காட்சியுடன் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில்  மாவட்ட அறிவியல் மைய அலுவலர் எம்.குமார், அறிவியல் மைய கல்வி அலுவலர்  மாரிலெனின் வரவேற்றார். நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும்  பெண்களும் பங்கேற்றனர்.

பாளை மார்க்கெட் பகுதியில் உள்ள சமக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடந்த மகளிர் தினவிழாவுக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் லட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அழகேசன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுசெயலாளர் சுந்தர் பங்கேற்று கேக் வெட்டி மகளிர் அணியினருக்கு சேலைகள் வழங்கினார். மாவட்ட துணை செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட இணை செயலாளர் வினோத், மைக்கேல் பிரபு, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெபஸ்டின், ஜோசப், ஒன்றிய செயலாளர் இளஞ்செழியன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் இசக்கிமுத்து, வார்டு செயலாளர் முத்து ஸ்டீபன், இளைஞர் அணி செயலாளர் முத்து அண்ணாமலை, மகளிர் அணி பேராச்சி செல்வி, முத்துலட்சுமி, சண்முகலட்சுமி, அருணாசலம், உமா, ராமலட்சுமி, இலக்கிய பிரியா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணை செயலாளர் பவுல்ஆதித்தன் நன்றி கூறினார்.

 மகளிர் தினத்தை முன்னிட்டு பாரதிய மஸ்தூர் சங்கத்தின் இணைப்பு சங்கமான தக்ஸின ரயில்வே கார்மிக் சங்கத்தின் சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மகளிர் தின கொண்டாட்டம் நடந்தது. இதில் துப்புரவு பெண் தொழிலாளர்கள் மற்றும் ரயில்வே பெண் தொழிலாளர்களுக்கு பெண்களின் வளர்ச்சி முன்னேற்றம், அதற்கான அரசின் திட்டங்கள், பணியிடத்தில் பாதுகாப்பு, சட்டப் பாதுகாப்பு மற்றும் அதற்கான தீர்வு குறித்து விளக்கி சிறு கையேடு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்க நெல்லை கிளை செயலாளர் ரவி தலைமை வகித்தார். கிளை துணை தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். கோட்ட துணைத் தலைவர் கருப்பசாமி வரவேற்றார். கோட்ட செயலாளர் அருண்குமார், மற்றும் தென் மண்டல துணை பொதுச் செயலாளர் டி.எஸ்.மணி ஆகியோர் பேசினர். நெல்லை ரயில் நிலைய மேலாளர் முருகேசன் பெண்கள் பாதுகாப்பு குறித்த முதல் கையேட்டை வழங்கினார்.

நெல்லை ரயில் நிலைய சுகாதார ஆய்வாளர் ஸ்மித்தா, பெண் பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். துணை மேலாளர் (வணிகம்) வெங்கடேசன், நிலைய அதிகாரி முத்துலெட்சுமி,நெல்லை மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கத்தின் செயலாளர் செந்தில் பாண்டியன், மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரன், நிலைய மூத்த பிரிவு மின்சார பொறியாளர் ஆனந்த குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கிளை துணை தலைவர் பூல்பாண்டி நன்றி கூறினார். நெல்லை பேட்டை காமராஜர்நகர் மன்ற மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தின விழா நடந்தது. பள்ளியில் பயிலும் மாணவிகள் அனைவருக்கும் தலைமையாசிரியர் சோமசுந்தரம் இனிப்பு வழங்கி மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 பாளை கத்தோலிக்க மறை மாவட்டத்தின் கீழ் செயல்படும்  நெல்லை சமூக சேவை சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா நடந்தது. நெல்லை  மாவட்ட சமூக நல அலுவலர் தனலெட்சுமி தலைமை வகித்தார். நெல்லை சமூக சேவை  சங்க நிர்வாக மேலாளர் அருள்மேரி வரவேற்றார்.  சுமதி, சமுத்திரக்கனி,  தமிழரசி ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். சமூக சேவை சங்க இயக்குநர்  பாதிரியார் பிரான்சிஸ் சேவியர் துவக்க உரையாற்றினார். பேராசிரியை மேரி  ஜெலஸ்டின் கலா, சரணாலய இயக்குநர் பாதிரியார் ஞானதினகரன், நெல்லை  நீதிக்குழும உறுப்பினர் வக்கீல் ஆரோக்கியமேரி, மாவட்ட குழந்தைகள்  பாதுகாப்பு அலுவலர் அருட்செல்வி, உடையார்பட்டி பங்குதந்தை மைக்கேல்ராஜ்  ஆகியோர் பேசினர். பல்வேறு மகளிர் குழு உறுப்பினர்களின் ஒயிலாட்டம், கும்மி,  கோலாட்டம், நடனம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாவட்ட மகளிர்  கூட்டமைப்பு ஜாய்ஸ் சுகந்தி நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஜோஸ்பின்,  பெரியநாயகி ஆகியோர் தொகுத்து வழங்கினர். காவல்துறை தலைவர்  மற்றும் சிறைத்துறை தலைவர் அம்ரித் புஜாரி உத்தரவின் படி மதுரை சரக  சிறைத்துறை துணைத்தலைவர் பழனி வழிகாட்டுதல் படி பாளை மத்திய சிறை  கண்காணிப்பாளர் (பொ) வினோத் தலைமையில் சிறை பெண் பணியாளர்கள் மகளிர்  தினத்தை கொண்டாடினர். மேலும் பேருரணி மாவட்ட சிறை,  கொக்கிரகுளம் பெண்கள்  தனிச்சிறை, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பெண்கள் கிளை தனிச்சிறை பெண்  பணியாளர்கள் மகளிர் தினத்தை கொண்டாடினர்.

Related Stories: