தொட்டியப்பட்டி பாம்பாளம்மன் கோயில் திருவிழா

துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே தொட்டியப்பட்டி பாம்பாளம்மன் கோயில் திருவிழாவையொட்டி வான வேடிக்கை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அடுத்த தொட்டியப்பட்டியில் உள்ள பாம்பாளம்மன் கோயில் திருவிழா வானவேடிக்கைகளுடன் கரகம் பாலித்து அம்மன் ஆலயம் புகுதல் விழா நடைபெறும். இவ்வாண்டு கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆலயத்திலிருந்து உற்சவ மூர்த்தி அருகில் உள்ள புல்லூரணி தென்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தேவராட்டம், கரகம் அருள் சக்தியுடன் உயிரூட்டல் நிகழ்வுகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வானவேடிக்கை நடைபெற்றது.  அதனைத்தொடர்ந்து மங்கல வாத்தியம், தாரைத்தப்பட்டைகள் முழங்க கரகம் பாலித்து அம்பாள் அருள் சக்தியுடன் ஆலயம் வந்தடைதல் நடைபெற்றது. பின் ஆலய வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்தும், அங்கபிரதட்சணம் செய்தும், மாவிளக்கு, குழந்தை வரம் பெற்ற கரும்புத்தொட்டில், ஆடு, கோழி என பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். நேற்று (புதன்கிழமை) மாலை எருதுகள் மாலை தாண்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories: