திருச்சி: திருச்சி மாவட்ட சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ஒருநாள் புலன் விசாரணை பயிற்சி முகாம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. சென்னை சிலை திருட்டு தடுப்புப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில், காவல்துறை தலைவர் தினகரன் வழிகாட்டுதலின்படி, காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் மேற்பார்வையில் கடந்த 22ம் தேதி சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு தலைமையிடத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்டம்தோறும் உள்ள சிலை திருட்டு தடுப்புப்பிரிவின் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சிலைகளின் தொன்மை தன்மை குறித்தும், புலன்விசாரணை திறன்களை மேம்படுத்திடும் நோக்கோடும் அதுசார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்திட மத்திய மண்டல கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகனுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி நேற்று திருச்சி சிலைத்திருட்டு தடுப்பு பிரிவு அலுவலகத்தில், மத்திய மண்டல ஏடிஎஸ்பி பாலமுருகன் முன்னிலையில் சிலைதிருட்டு தடுப்பு பிரிவு டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் “தொன்மையான சிலைகளின் முக்கியத்துவம்” குறித்து தமிழ்நாடு தொல்லியல் துறையைச் சேர்ந்த தங்கதுரை, \”சிலை திருட்டு வழக்குகளில் தொல்லியல் துறையின் பங்கு” என்ற தலைப்பில் தமிழ்நாடு தொல்லியல் துறையை சேர்ந்த சாய்பிரியா, சிலைதிருட்டு வழக்குகளை திறம்பட புலன்விசாரணை செய்வதற்கும், நீதிமன்ற விசாரணையை சிறப்பாக மேற்கொள்ளவும், காவல் அதிகாரிகள் புலன்விசாரணையின்போது செய்யும் தவறுகளை களையவும், சட்டரீதியான அறிவுரைகள் மற்றும் அணுகுமுறைகள் குறித்து கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற உதவி அரசு வழக்கறிஞர் கோபிகண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.இந்த பயிற்சியில் துறைசார்ந்த சிறப்பு அழைப்பாளர்கள் தங்களது தொழில்சார்ந்த அனுபவங்களையும், அறிவுரைகள் வழங்கினர்.