எம்பி உள்ளூர் வளர்ச்சித் திட்டத்தில் இருந்து சிறந்த சிந்தனைக்கு சிறப்புப் பரிசு

திருச்சி: எம்பி உள்ளூர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ‘ஒரு எம்பி-ஒரு ஐடியா’ என்ற செயலாக்கத்தின் வாயிலாக புதுமையான மற்றும் நிலைத்த நீடித்த தீர்வுகளை தெரிவிக்கும் வகையிலான சிறந்த திட்ட அறிக்கைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருச்சி மாவட்டத்தில் எம்பி உள்ளுர் வளர்ச்சித் திட்ட வழிகாட்டு நெறி முறைகளில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில், ‘ஒரு எம்.பி - ஒரு ஐடியா’ என்ற செயலாக்கத்தின் மூலம், கல்வித்திறன், ஆரோக்கியம், குடிநீர், சுகாதாரம், குடியிருப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், வேளாண்மை, எரிசக்தி, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் புதுமையான தீர்வுகள் காணும் வகையில், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை கொண்ட கருத்தாக்கங்கள் பெற்று அதில் தேர்வு செய்யப்படும் முதல் 3 நபர்களுக்கு ரொக்க பரிசாக முறையே ₹2,50,000, ₹1,50,000 மற்றும் ₹1,00,000 வழங்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் தகுதியான நபர்கள் இத்திட்டத்தில் பங்கு பெற்று பரிசு பெற்றிட திருச்சி சிவா எம்பி 2022-2023ம் ஆண்டு, எம்பி உள்ளுர் வளர்ச்சி திட்ட நிதியில் இருந்து பரிந்துரை செய்துள்ளார். எனவே புதுமையான மற்றும் நீடித்து நிலைத்த தீர்வுகள் குறித்த கருத்துருக்களை சமர்ப்பிக்க விரும்புவோர் எம்பி மேம்பாட்டு திட்ட இணையதளத்தில் www.mplads.nic.in தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, விரிவான அறிக்கை தயார் செய்து வரும் மார்ச்.31ம் தேதிக்குள் திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் இணை இயக்குநர் அல்லது திட்ட இயக்குனருக்கு அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: