திருச்சி: திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா இன்று (6ம் தேதி) இரவு மறுகாப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. பிரசித்தி பெற்ற குட்டி குடித்தல் விழா வரும் 9ம் தேதி நடக்கிறது.
திருச்சி புத்தூரில் உய்யகொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் பிரியும் இடத்தில் குழுமாயி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் மாசி மாதம் நடைபெறும் குட்டிக்குடி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. விழாவையொட்டி, கடந்த 22ம் தேதி கோயிலில் காப்புக்கட்டப்பட்டது. தொடர்ந்து இன்று இரவு (6ம் தேதி) மறுகாப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது. நாளை (7ம் தேதி) புத்தூர் கிராம மக்கள் சார்பில் காளியாவிட்டம் நடக்கிறது. 8ம் தேதி சுத்த பூஜை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, பக்தர்கள் ஆட்டுக்கிடா பலியிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றும் குட்டிக்குடி நிகழ்ச்சி 9ம் தேதி நடக்கிறது. நிகழ்ச்சியில் முதல் மரியாதையாக, கலெக்டர் அலுவலகம் சார்பில் முதல் ஆட்டுக்கிடா வழங்கப்படும்.