புழலில் வடமாநில தொழிலாளர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்: உதவி கமிஷனர் ஆதிமூலம் பங்கேற்பு

புழல்: தமிழகத்தில் சென்னை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஓட்டல், மழைநீர் கால்வாய் அமைத்தல், கட்டிடப் பணி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் லட்சக்கணக்கான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் வந்து, ஆங்காங்கே தங்கியிருந்து குறைவான ஊதியத்தில் வேலை செய்து வருகின்றனர். இதனால், அந்தந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும், வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருவதாகவும், அவர்களுக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதாகவும் பல்வேறு சமூக வலைதளப் பக்கங்களில் வதந்திகள் பரவின. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்  மற்றும் அச்சுறுத்தல் பற்றிய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

அவர்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில், வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புழல் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஓட்டல்கள், டீக்கடைகள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் அச்சத்தை போக்க, நேற்று முன்தினம் மாலை புழல் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் புழல் சரக உதவி கமிஷனர் ஆதிமூலம், இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

உதவி கமிஷனர் ஆதிமூலம் பேசுகையில், ‘‘புழல் பகுதியில் தங்கி வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. தங்களுக்கு அச்சுறுத்தல் தொடர்பாக வரும் வதந்திகளை நம்பவேண்டாம். உங்களுக்கு தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உறுதுணையாக இருக்கும். உங்களுக்கு ஏதேனும் எதிர்ப்பு வந்தால், புழல் காவல் நிலையத்தை நேரில் அணுகலாம். அல்லது, இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐக்களின் செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.’’ என உறுதி தெரிவித்தார்.

Related Stories: