ஆவடி காவல் ஆணையரக துப்பறியும் பிரிவில் புதிய மோப்ப நாய் சேர்ப்பு: ஆணையர் பெயர் சூட்டினார்

ஆவடி: ஆவடி காவல் ஆணையரக துப்பறியும் பிரிவில் மோப்ப நாய் சேர்க்கப்பட்டது. அதற்கு காவல் ஆணையர் பெயர் சூட்டினார். ஆவடி காவல் ஆணையரகத்துக்கு சென்னை மாநகர காவல்துறையில் இருந்து 3 மோப்ப நாய்கள் வழங்கப்பட்டு, துப்பறியும் மோப்ப நாய்கள் படைப்பிரிவு துவங்கப்பட்டது. வெடிகுண்டு கண்டறிதலில் 2 நாய்களும், குற்றவழக்குகளில் தடயங்களை கண்டறிவதில் ஒரு நாய் என 3 நாய்கள் சிறந்த நிபுணத்துவம் பெற்று சிறந்து விளங்கியது. அதேபோல், கடந்த ஆண்டு மே மாதம் துப்பறியும் மோப்ப நாய்கள் பிரிவில் கூடுதலாக 2 நாய்கள் சேர்க்கப்பட்டன. இவற்றில் டோனி என்ற நாய், உடல்நல குறைவால் கடந்த டிசம்பர் மாதம் இறந்தது.

இந்நிலையில், துப்பறியும் மோப்ப நாய்கள் பிரிவில் 4 மாதமேயான  ‘டாபர் மேன்’ ரக நாய் நேற்று புதிதாக சேர்க்கப்பட்டது. அதற்கு ‘கிக்கி’ என காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் பெயர் சூட்டினார். தற்போது, துப்பறியும் மோப்ப பிரிவில் டாபர் மேன் 3; லாப்ரடோர் 2; என 5 நாய்கள் உள்ளன. இந்த நாய்கள் 29 குற்றவழக்குகள் மற்றும் 14 கொள்ளை வழக்குகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வருகிறது. நிகழ்ச்சியில் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் பேசுகையில், ‘‘ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் துறைமுகம் பகுதிகளில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதுவரை அவர்களுக்கு எந்த ஒரு சிறு பிரச்னையும் ஏற்படவில்லை. இனிமேல் பிரச்னை ஏதும் ஏற்படாத வண்ணம் சரக காவல்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். அனைத்து தொழிற்சாலை உரிமையாளர்களுடன் உடனுக்குடன் தகவல்களை கேட்டு அறிந்தும் வருகிறோம். வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து, வருகின்ற திங்கட்கிழமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் அனைத்து தொழிற்சாலை உரிமையாளர்கள் கூட்டமைப்புடன் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளது,’’ என்றார்.

Related Stories: