களைஅகற்றும் பணி தீவிரம் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நிறைவு இன்றுடன் முடிவுக்கு வருகிறது தேர்தல் நடத்தை விதிமுறைகள்

ஈரோடு,மார்ச்4: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்றுடன்  நிறைவடைகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.இதையடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவ குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 18ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.அதன்படி பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான அன்றைய தினம் முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இதையடுத்து, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலையான கண்காணிப்புக் குழுவினர், 3 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பரிசுப் பொருள்கள் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த 45 நாள்களாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, கடந்த பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது.இதையடுத்து, தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்றுடன் (4ம் தேதி) முடிவுக்கு வருகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. வாக்குசாவடியில் 1190 வாக்குபதிவு இயந்திரங்கள், 238 கட்டுப்பாடு இயந்திரங்கள், 238 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. கடந்த 27ம் தேதி வாக்குசாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனைத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சித்தோடு ஐஆர்டி பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதையடுத்து அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரவோடு இரவாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஈரோடு மாநகராட்சியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை பணி நிறைவடைந்த பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு வரப்பட்டது. அதிகாலை 3.30 மணி இப்பணிகள் நடைபெற்றது. அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டு உறுதி செய்த பின்னர் பாதுகாப்பு அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. மாநகராட்சியில் உள்ள பாதுகாப்பு அறையில் 6 மாதகாலத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கும். அதன்பின்னர் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்படும்.

Related Stories: