லால்குடி, மார்ச் 2: லால்குடி அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சிகிச்சைகள் குறித்தும், உணவு முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கும் இடம், படுக்கை வசதிகள், நோயாளிகளுக்கு உணவு தயார் செய்யப்படும் சமையலறை கூடம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.
நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.மேலும் மருத்துவமனை சுற்றிலும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மருத்துவமனைக்கு கூடுதலாக கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கபட உள்ள நிலையில் முன்னதாக பழைய கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டார். மண் முட்டுகளை விரைவில் அகற்றி பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்தகாரர்களிடம் அறிவுறுத்தினார். மேலும் சிறுதையூர் நான்கு ரோட்டில் இருந்த காந்தி சிலையை சாலை விரிவாக்கப் பணியின்போது அகற்றி மருத்துவ மனையின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலையை பார்வையிட்டு மருத்துவமனை வளாகத்தில் தற்போது அமைத்திட உத்தரவிட்டார்.
இதில் லால்குடி நகராட்சி தலைவர் துரை மாணிக்கம், மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் செழியன், நகராட்சி ஆணையர் குமார், நகராட்சி துணைத் தலைவர் சுகுணா ராஜ்மோகன் , நகராட்சி உறுப்பினர்கள் செந்தில்மணி, வைர காவியன், மாரிகண்ணு, சர்மிளா, சாகுல் ஹமீது மற்றும் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.