பெரம்பலூர், மார்ச் 2: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கவும் மேம்படுத்தவும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் வானவில் மன்றம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆலத்தூர் வட்டாரத் திற்கு இரண்டு வானவில் மன்ற அறிவியல் கருத்தாளர்களாக ரம்யா மற்றும் சுகன்யா ஆகிய இருவரும் 20 நடுநிலை பள்ளிகள், 12 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 8 மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 40 பள்ளிகளில் அறிவியல் ஆய்வுகள் செய்து காட்டப்பட்டும் விளக்கங்கள் எடுத்துரைத்தும் அறிவியல் உணர்வை மேலோங்க செய்கின்றனர்.
இதற்கு உறுதுணையாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செயல்பட்டு வருகிறது. அவ்வகையில் மாணவர்களின் அறிவியல்ஆய்வு திறமைகளை மதிப்பீடு செய்ய துளிர் திறனறிதல் தேர்வானது கடந்த 22ம் தேதி நடைபெற்றது. இவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேசிய அறிவியல் தினமான நேற்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உற்சாகப்படுத்தப்பட்டது. தேசிய அறிவியல் தினமான நேற்று பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் வஹிதா பானு, வட்டார கல்விஅலுவலர்கள் வினோத்குமார் மற்றும் சின்னசாமி ஆகியோர் முன்னிலையில் பள்ளி தலைமையாசிரியர் (பொ) பெரியசாமி தொடங்கி வைத்து அறிவியலில் சாதித்த விஞ்ஞானிகள் பற்றியும் சர்சிவிராமன் கண்டறிருந்த ராமன் விளைவுகள் பற்றியும் கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆனந்த், பரிமளா அன்பரசு, இளங்கோவன், தலைமலை, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் குமார், வானவில் மன்ற அறிவியல் கருத்தாளர் ரம்யா, பள்ளி ஆசிரியர்கள் சீனிவாசன், வேல்முருகன், உஷாராணி, கண்ணுசாமி, சுமதி, சிவகாமி, வனிதா, நித்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவற்றில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 50 மாணவர்கள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர். சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.