திண்டுக்கல் மாவட்ட தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாட்டுடன் கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவக்கம்

கொடைக்கானல், பிப். 23: கிறிஸ்தவர்களின் மீட்பரான இயேசு பாடுபட்ட நாட்களை அனுசரிப்பதே தவக்காலம். இந்த 40 நாட்கள் தவக்காலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து, தியானித்து, ஒருத்தல் முயற்சிகளை மேற்கொண்டு எளியவர்களுக்கு ஈகை செய்வர். இந்த தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நேற்று தவக்காலத்தின் தொடக்கநாளையொட்டி கொடைக்கானலில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இந்த திருப்பலி பூஜைகளில் கலந்து கொண்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் நெற்றியில் எரிக்கப்பட்ட ஓலைகளில் இருந்து பெறப்பட்ட சாம்பலை நெற்றியில் சிலுவையாக பூசப்பட்டது.

கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் வட்டார அதிபர் அருட்தந்தை ஜான் திரவியம், உகார்த்தே நகர் குழந்தை இயேசு ஆலயத்தில் அருட்தந்தை பீட்டர் சகாய ராஜா, செண்பகனூர் சவேரியார் ஆலயத்தில் அருட்தந்தை அப்போலின் கிளாரட்ராஜ் ஆகியோரது தலைமையில் விபூதி புதன் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் கலந்து கொண்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் சிலுவையாக, ‘மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்’ என கூறி பூசப்பட்டது. மேலும் திண்டுக்கல் புனித வளனார் தேவாலயத்தில் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி, மேட்டுப்பட்டி வியாகுல அன்னை தேவாலயத்தில் பங்குத்தந்தை செல்வராஜ், வத்தலக்குண்டு புனித தோமையார் ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வின்ராஜ், சின்னுபட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் பால்ராஜ் ஆகியோரது தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நெற்றில் சாம்பல் பூசி தவக்காலத்தை துவங்கினர்.

Related Stories: