அரியலூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் மக்கள் பங்கேற்க அழைப்பு

அரியலூர், அக்.1: அரியலூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை நடைபெற உள்ள கிராம பஞ்சாயத்துக்களில் நாளை நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு வேளாண்- உழவர் திட்டப் பயன்களை அறிந்து கொண்டு பயன்பெறலாம் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் கிராம சபைக் கூட்டங்கள் ஆண்டுதோறும் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளில் ஜனவரி - 26 (குடியரசு தினம்), மே-1 (உழைப்பாளர் தினம்), மார்ச்-22 (உலக தண்ணீர் தினம்), ஆகஸ்டு-15 (சுதந்திர தினம்), அக்டோபர்-2 (காந்தி ஜெயந்தி) மற்றும் நவம்பர்-1 (உள்ளூர் நிர்வாக தினம்) ஆகிய தினங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையால் நடத்தப்படுகிறது. கிராம சபை கூட்டங்களில் வேளாண் - உழவர் நலத்துறை திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கவும், காட்சிப்படுத்தவும், பயனாளிகள் பட்டியலை பார்வைக்கு வைத்திடவும் அரசாணை (நிலை) எண். 41 வேளாண் - உழவர் நலத்துறை, நாள். 23.2.2022 இல் ஆணை வழங்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்களை கிராமசபைக் கூட்ட நிகழ்வினை வேளாண்மைத்துறை மற்றும் அதன் சகோதர துறைகளுடன் ஒருங்கிணைந்து செவ்வனே நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கிராமசபைக் கூட்டங்களில், வேளாண் - உழவர் நலத்துறையில் பல்வேறு திட்டங்களில் 2022-2023 ஆம் ஆண்டில் பயன்பெற்றத் திட்டப் பயனாளிகளின் பெயர் விபரங்களை ஊராட்சி வாரியாக தயாரித்து, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திட பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் வைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வேளாண்மையில் புத்தாக்கம் ஏற்படுத்தி நிலையான உயர் வளர்ச்சி அடைவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் முத்தான மூன்று பத்தாண்டு தொலைநோக்கு திட்டங்களை வேளாண் - உழவர் நலத்துறைக்கு வழங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் கூடுதலாக 11.75 லட்சம் எக்டர் பயிரிடச் செய்து, தற்போதுள்ள நிகர பயிரிடு பரப்பான 60 விழுக்காடு 75 விழுக்காடாக உயர்த்தப்படும். 10 லட்சம் எக்டர் அளவுக்கு உள்ள இரு போக சாகுபடி நிலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குள் இரு மடங்காக, அதாவது, 20 லட்சம் எக்டராக உயர்த்தப்படும். உணவு தானியங்கள், தேங்காய், பருத்தி, சூரியகாந்தி மற்றும் கரும்பு ஆகிய பணப்பயிர்களுக்கான வேளாண் ஆக்கத்திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகம் இடம் பிடிக்கும். இம்மூன்று தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்திடும் வகையில், 2022-2023 ஆம் ஆண்டில் முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் துறையின் முக்கிய முயற்சிகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்து, அவற்றினை அறிந்து கொள்ளும் வண்ணம் கண்காட்சி மற்றும் பதாகைகள் வைக்கப்பட உள்ளது. மேலும், கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு வேளாண் - உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள் பற்றிய துண்டுப்பிரசுங்கள் வழங்கப்பட உள்ளது.

இக்கூட்டத்தில், வேளாண் - உழவர் நலத்துறையின் உழவன் செயலி பற்றிய பயன்பாட்டினை எடுத்துரைத்து, தேவைப்படும் விவசாயிகளுக்கு பதிவிறக்கம் செய்தும் கொடுக்கப்பட உள்ளது. பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்களை இணைக்கும் அவசியத்தை எடுத்துக்கூறி அத்திட்டப் பயன்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட உள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் கிராம பஞ்சாயத்துகளில் நாளை (2.10.2022) நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண் - உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப் பயன்களை அறிந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Related Stories: