மாடு மேய்க்க சென்றபோது பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தீக்குளிப்பு: போக்சோவில் 4 பேர் கைது

திருவள்ளூர், செப்.30: மாடுமேய்க்க சென்றபோது பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமி தீக்குளித்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், போக்சோ சட்டத்தில் 4 பேரை கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த மோவூர் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் மாடு மேய்க்கசென்றபோது அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். பின்னர் அவற்றை செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அவமானம் அடைந்த அந்த சிறுமி, மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுசம்பந்தமாக சிறுமியின் உறவினர்கள் மற்றும் தமிழர் படையின் தலைவர் கி.வீரலட்சுமி ஆகியோர் திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

இதனிடையே பலத்த தீக் காயங்களுடன் சிறுமி, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுசம்பந்தமாக பென்னலூர்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வீடியோ பதிவு செய்திருப்பதும் சிறுமியை தற்கொலைக்கு தூண்டியிருப்பதும் உறுதியானது. இதையடுத்து ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக அஜித் குமார் (25), ஞானமூர்த்தி(20), ராசு(23), அஜித்(26) ஆகிய 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: