தென்னை மரத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி

போச்சம்பள்ளி. செப்.30: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் மாதம்பதி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (27), மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று காலை, கொடமாண்டப்பட்டி கிராமத்தில் விவசாயி முருகன் என்பவரது தோட்டத்தில், தேங்காய் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது மட்டை ஒன்று தொங்கியபடி கீழே விழும் நிலையில் இருந்தது. அந்த மட்டையை பிடித்து மணிகண்டன் இழுத்தபோது, தென்னை மரத்தை ஒட்டியபடி சென்ற மின்கம்பியில் தென்னை ஓலை பட்டதால், அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மரத்தில் தொங்கிய நிலையில், மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்களை வரவழைத்து, மணிகண்டன் உடலை  மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வந்த மணிகண்டனின் உறவினர்கள் 500க்கும் மேற்பட்டோர், அவரது உடலை எடுக்கக்கூடாது என்றும்,  அடிக்கடி இதுபோல் சம்பவங்கள் நடக்கிறது. எனவே, மேல் அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என்றும் கூறி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 100க்கும் மேற்பட்டவர்கள் ஊத்தங்கரை-மத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மத்தூர் போலீசார், மணிகண்டன் உறவினர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பேரில், உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து மரத்தில் இருந்த மணிகண்டனின் உடலை, தீயணைப்பு வீரர்கள் கீழே கொண்டு வந்தனர். பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக போலீசார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: