சென்னிமலை அருகே ஈங்கூர் மேம்பாலத்தில் டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்தது

ஈரோடு, செப். 30: சென்னிமலை அருகே ஈங்கூர் மேம்பாலத்தில், டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்ததில், அவ்வழியாக  1 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சென்னிமலை அடுத்த பனியம்பள்ளியில் உள்ள கல்குவாரியில் இருந்து நேற்று டிப்பர் லாரி ஒன்று கருங்கற்களை ஏற்றிக்கொண்டு பெருந்துறை நோக்கி சென்றது. இந்த லாரியை ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த நாகராஜ் (35) என்பவர் ஓட்டி சென்றார். லாரி ஈங்கூர் ரயில்வே மேம்பாலத்தில் ஏறும்போது ஈங்கூரில் இருந்து சென்னிமலையை நோக்கி வந்த மற்றொரு டிப்பர் லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதின. இதில் 2 டிப்பர் லாரிகளும் கவிழ்ந்தன. இவ்விபத்தில் டிப்பர் லாரி டிரைவர்கள் நாகராஜ் , மோகன் உள்பட 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

சென்னிமலையை நோக்கி சென்ற டிப்பர் லாரி மேம்பால சாலையின் குறுக்கே கவிழ்ந்ததால் அவ்வழியே சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் கருங்கற்கள் ஏற்றி வந்த  டிப்பர் லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதனால் கருங்கற்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சென்னிமலை போலீசார் அனைத்து வாகனங்களையும் பெருந்துறை ஆர்எஸ் வழியாக திருப்பி விட்டனர். இதையடுத்து கிரேன் மூலம் ரோட்டின் குறுக்கே கிடந்த லாரிகள் அப்புறப்படுத்தப்பட்டது. இவ்விபத்து குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: