ஓடை புறம்போக்கு இடத்தில் தனியார் பெயரில் பட்டா மாற்றம்: ரத்து செய்ய கோரிக்கை மனு

புழல், செப். 29: ஓடை புறம்போக்கு இடத்தில் தனியார் பெயரில் பட்டா மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என எம்எல்ஏ சுதர்சனம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். செங்குன்றம் நாராவாரிக்குப்பம் பேரூராட்சி துணைத் தலைவர் விப்ரநாராயணன், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனத்தை சந்தித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கோரிக்கை மனு வழங்கினார். அதில், கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டத்தின் கீழ், அடங்கியுள்ள செங்குன்றம் புழல் ஏரி உபநீர் வெளியேற்றும் கால்வாய் அமைவிடத்தில், ஓடை புறம்போக்கு தனியார் பெயரில் பட்டா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, முன்பு சென்னை எழும்பூர் ஆவண காப்பகத்தில் உள்ள பதிவேட்டில் ஓடை புறம்போக்கு என்ற வகைப்பாட்டில் உள்ளது.

எனவே, பட்டா மாறுதல் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். இதைப் பெற்றுக் கொண்ட எம்எல்ஏ சுதர்சனம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் சிலர் மேற்கண்ட இடத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதை தடுத்து நடவடிக்கை எடுக்கவும், பொன்னேரி வருவாய்த் துறையினர் விசாரணை செய்து பட்டாவை ரத்து செய்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories: