அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு, செப். 28: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ராதாமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் மணிமாலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக பேசினார். இதில், அங்கன்வாடி மையங்களில் கியாஸ் சிலிண்டருக்கான முழு தொகையை வழங்க வேண்டும் அல்லது ஆண்டுக்கு 4 சிலிண்டர்களை அரசே ஏற்று வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பழுதடைந்த செல்போன்களுக்கு பதிலாக புதிய செல்போன்கள் வாங்கி கொடுக்க வேண்டும். 15 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை ஒன்றொடொன்று இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: