கரூர் மாநகராட்சி கூட்டம் 153 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கரூர், செப். 27: கரூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 153 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கரூர் மாநகராட்சி கூட்டரங்கில் நேற்று காலை சாதாரண கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை வகித்தார். துணை மேயர் தாரணி சரவணன், கமிஷனர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மண்டல தலைவர்கள் சக்திவேல், அன்பரசன், ராஜா, கனகராஜ் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். 153 தீர்மானங்கள் அடிப்படையில் கூட்டம் துவங்கிய நிலையில், மாநகராட்சி மேயர் கவிதா முன்மொழிவதாக அறிவித்த, கரூர் மாநகராட்சி திருமாநிலையூர் பகுதியில் ரூ. 66கோடி மதிப்பில் புதிய பேரூந்து நிலையம் அமைக்க தமிழக முதல்வரால் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியால் அடிக்கல் நாட்டப்பட்டு புதிய பேரூந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் அமையவுள்ள நவீன புதிய பேரூந்து நிலையத்திற்கு கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் என பெயர் சூட்ட இந்த மன்றம் தீர்மானிப்பதாக அறிவித்து முடித்ததை தொடர்ந்து, மற்ற தீர்மானங்கள் குறித்து இந்த கூட்டத்தில் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையையும், கரூர் புகழூர் சாலையையும் இணைக்கும் இணைப்பு சாலைக்கு அறிஞர் அண்ணா சாலை என பெயர் வைக்க வேண்டும். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 5வது வார்டு பகுதியில் 1 முதல் 9வரை கிராஸ்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள அனைத்து வடிகால்களும் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மேலும், அனைத்து வடிகால்களும் மிகவும் பழுதடைந்துள்ள நிலையில் உள்ளது. இதனால், கழிவு நீர் சரிவர போகாமல் தேங்கி நிற்பதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது.

எனவே, இதனை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு அதனப்படையில் விவாதம் நடைபெற்று பின்னர் 153 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சாதாரண கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் நிலவி வரும் பொதுமக்கள் பிரச்னை குறித்து மேயர், கமிஷனர், துணை மேயர் ஆகியோர்களிடம் தெரிவித்தனர். இந்த பிரச்னை குறித்து உடனுக்குடன் பார்வையிட்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கோரிக்கை சம்பந்தமாக சாதாரண கூட்டத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விவாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி உறுப்பினர்  சாலை ரமேஷ் பேசுகையில், குளத்துப்பாளையம் ரயில்வே குகை வழிப்பாதையில் மழைகாலங்களில் சிறிய அளவில் மழை பெய்தால் கூட வாகனத்தில் செல்ல முடியாத அளவிற்கு அதிகமான அளவு நீர் தேக்கி பொதுமக்கள் பொது வழி பாதை செல்ல அச்சத்துடன் செல்கின்றனர்.

எனவே இதில் தேங்கியுள்ள தண்ணீரை நிரந்தரமாக நீக்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் தொழில் வரி பாக்கி ரூ.7 கோடிக்கு மேல் உள்ளதால் இதனை முழுமையாக வரி வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் வார்டு உறுப்பினர் சரவணன் பேசுகையில்,  கோதூர் பகுதியில் சரிவர தெரு விளக்குகள் எரிவதில்லை இதுதொடர்பாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும்   உரிய நடவடிக்கை எடுக்க வில்லை எனவே விரைவில் தெரு விளக்கு எரிவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.இதற்கு பதிலளித்த மேயர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Related Stories: