உட்கட்டமைப்பை மேம்படுத்த விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, செப்.24: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கால்நடை பராமரிப்புத்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, அரசு ₹15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பால் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்தல், இறைச்சி பதப்படுத்துதல் மற்றும், தீவன உற்பத்தி ஆலைகளை நிறுவுதல், கால்நடை இனவிருத்தி தொழில்நுட்பம் மற்றும் கால்நடை பெருக்க பண்ணைகள் அமைத்தல், கால்நடைகளுக்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் தயாரித்தல், தாது உப்புகள், ஊறுகாய் புல் தயாரித்தல் மற்றும் கால்நடை தீவன ஆய்வு கூடங்கள் அமைத்தல் போன்ற தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள், விவசாய உற்பத்தி குழுக்கள்,

பங்குதாரர் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன் 90 சதவீதம், பயனாளிகள் பங்களிப்பு 10 சதவீதம், நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பயனாளி பங்களிப்பு 15 சதவீதம், மற்ற பிரிவினர்களுக்கு பயனாளி பங்களிப்பு 25 சதவீதம், இதில் 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் வளைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களை பெற கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகம், உதவி இயக்குநர் அலுவலகங்கள், கால்நடை மருந்தக உதவி மருத்துவர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார பேரவை ஆலோசனை கூட்டம்

காவேரிப்பட்டணம், செப்.24: காவேரிப்பட்டணம் வட்டார சுகாதார பேரவையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், ஊராட்சி மன்றத்தலைவர்கள், பிடிஓ.,க்கள், தாசில்தார்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார குழந்தைகள் நல அலுவலர் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோருக்கான மருத்துவத்துறை சார்ந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் தாமரைச்செல்வி தலைமை வகித்து பேசினார். சுகாதார ஆய்வாளர் கந்தசாமி வரவேற்று பேசினார். உதவித்திட்ட மேலாளர் கீதா குத்துவிளக்கு ஏற்றினார். சிறப்பு விருந்தினராக திமுக நகர செயலாளர் பாபு கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவம் சார்ந்த நிறை குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் உள்ள 36 பஞ்சாயத்து தலைவர்கள், மருந்து அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் செந்தில் நன்றி கூறினார்.

Related Stories: