சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சாயல்குடி, செப்.24: திருஉத்தரகோசமங்கை மற்றும் சாயல்குடி பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நேற்று மாலையில் நடந்தது. புரட்டாசி மஹாளய மாத சிறப்பு பிரதோஷத்தை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயிலுள்ள நந்தியம்பெருமானாருக்கு மஞ்சள், பால், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. பிறகு உலக நன்மைக்காக வில்வம் இலை, தாழம்பூ சாற்றி சிறப்பு அர்ச்சனை நடந்தது. சாயல்குடி அருகே மாரியூர் பவளநிற வள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர், ஆப்பனூர் குழாலாம்பிகை உடனுரை திருஆப்பநாதர், சாயல்குடி மீனாட்சியம்மன் உடனுரை கைலாசநாதர்,

ஆப்பனூர் திருஆப்பநாதர், டி.எம். கோட்டை கருணாகடாச்சி உடனுரை செஞ்சிடைநாதர், மங்களம் ரேணுகாம்பாள் உடனுரை சோமேஸ்வரர், மேலக்கடலாடி நித்தியகல்யாணி உடனுரை வில்வநாதர் ஆகிய கோயில்களில் பிரதோஷ சிறப்பு அபிஷேகங்கள், விஷேச பூஜைகள் நடந்தது. கோயில்களிலுள்ள நந்தியம்பெருமானாருக்கு 11 வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சிவப்புராணம், திருவாசகம், திருமுறை உள்ளிட்ட பதிகங்களை பாடி கூட்டு பிரார்த்தனை செய்தனர். திருஉத்தரகோசமங்கை, மாரியூர் மற்றும் ஆப்பனூரில் உற்சவ மூர்த்தி ரிஷப வாகனத்தில் கோயில் பிரகார உலா வந்தார்.

Related Stories: