வேலை இழந்தவர்கள் தொடர் போராட்டம் சப் கலெக்டர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை: முடிவு எட்டப்படாததால் 2வது முறையாக ஒத்திவைப்பு

திருவள்ளூர், செப்.23: கடம்பத்தூர் ஒன்றியம், அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது. நிர்வாகம் கைமாறியதால் 172 தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர்.  இதனால் பாதிக்கப்பட்ட 172 தொழிலாளர்களும் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி கடந்த 4 வருட காலமாக பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் சாலை மறியல் போராட்டம், கம்பெனிக்கு பூட்டு போடும் போராட்டம், கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம், கலெக்டர் அலுவலகத்தில் தங்களது குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் தொழிற்சாலை நிர்வாகம் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் பலமுறை வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலைமையில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பணி வழங்க வில்லை.

இந்த நிலையில் கடந்த 12 ந் தேதி காலை பணி நீக்கம் செய்யப்பட்ட 172 தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருடன் தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து 10 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 15ம் தேதி  திருவள்ளூர் சப் கலெக்டர் மகாபாரதி தலைமையில் தொழிற்சாலை நிர்வாகம் தரப்பு மற்றும் தொழிலாளர்கள் தரப்பு என இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  மீண்டும் நேற்று தொழிலாளர்கள் தரப்பு, தொழிற்சாலை நிர்வாகம் தரப்பு மற்றும் மாவட்ட நிர்வாகம் என சப் கலெக்டர் மகாபாரதி தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகம் சார்பில், வட்டாட்சியர் மதியழகன், டிஎஸ்பி சந்திரதாசன், மண்டல துணை வட்டாட்சியர் சுந்தர்,  வருவாய் ஆய்வாளர் விஷ்ணுபிரியா ஆகியோரும், தொழிற்சாலை சார்பில் உற்பத்தி பொறுப்பாளர் ராஜ்கல்யான், மனிதவள மேம்பாட்டு அலுவலர் தீபக், நிர்வாக மேலாளர் அகஸ்டின் ஆகிய 3 பேரும், தொழிலாளர்கள் தரப்பில் முன்னாள் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஏ.எஸ்.கண்ணன், கே.கஜேந்திரன், இஸ்மாயில், சரவணன், ஆறுமுகம் ஆகியோர் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசிய உரிய பதில் அளிப்பதாக ஏற்கனவே தெரிவித்ததன் அடிப்படையில் பேச்சுவார்த்தை தொடங்கியது.

ஆனால் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை வழங்கிவிட்டதாகவும், தொழிற்சாலை நிர்வாகமே மாறிவிட்டதால் சட்ட ரீதியாக அவர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் எந்த உத்திரவாதமும் வழங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். சட்ட ரீதியாக வேலை வாய்ப்பு வழங்காவிட்டாலும்,  மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் கல்வி அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சப் கலெக்டர் மகாபாரதி வேண்டுகோள் விடுத்தார். அப்போது தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி இதற்கான முடிவை அறிவிப்பதாக தொழிற்சாலை சார்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கும் வரையில் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று தொழிலாளர்கள் தரப்பில் தெரிவித்தனர். இதனால் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகே இதற்கு தீர்வு காணப்படும் என சப் கலெக்டர் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories: